Also Watch
Read this
சென்னை ராயபுரத்தில் அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக, அந்த இல்லத்தின் காப்பாளர் மீது புகார் எழுந்துள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி சிறுவன் கதறியதால் கொந்தளித்த தாய், அந்த காப்பாளரின் கன்னத்தை பழுக்க வைத்துள்ளார்.
அரசினர் இல்லம்...
சென்னை ராயபுரத்தில் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. திருவொற்றியூரை சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப சூழ்நிலை காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை இந்த இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் உயிரிழந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து அதே இல்லத்தில் தங்கி படித்து வந்துள்ளார்.

கதறி அழுத சிறுவன்
இந்நிலையில், சிறுவனின் பிறந்தநாளன்று அவரை பார்ப்பதற்காக தாய் இல்லத்துக்கு வந்துள்ளார். அப்போது, சிறுவன் வழக்கத்துக்கு மாறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த தாய், மறுநாள் மீண்டும் சென்று மகனை தனியாக அழைத்து பேசியபோது, தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தாயிடம்கூறி, சிறுவன் கதறி அழுததாக சொல்லப்படுகிறது.
இல்லத்தில் காப்பாளராக பணியாற்றும் குமரேசன் என்பவர், தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தாக்கி துன்புறுத்தியதாகவும், கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் சிறுவன் கூறியுள்ளான்.

தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லாவிட்டால் தற்கொ* செய்துகொள்வேன் எனக்கூறி தாயிடம் கதறியுள்ளார். மகன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக காப்பாளர் குமரேசனின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.
பெரிது படுத்த வேண்டாம்...
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் குழந்தைகள் இல்லத்துக்கு சென்று, சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என குழந்தைகள் இல்லத்தின் நிர்வாகம் சார்பில் சிறுவனின் தாயிடம் பேசப்பட்டுள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மேலும், சிறுவனை பார்ப்பதற்காக சென்ற அவரது தாயை உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்ததாக கூறப்படும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை
குற்றச்சாட்டுக்கு உள்ளான காப்பாளர் குமரேசனை போலீசார் காசிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்தும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தைகள் பாதுகாப்புக்காக செயல்படும் அரசினர் இல்லத்திலேயே இத்தகைய அத்துமீறல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved