Also Watch
Read this

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே, வழக்கறிஞர் வீட்டிற்குள் புகுந்து, அடமானம் வைத்த நிலத்தின் ஒரிஜினல் பத்திரத்தை பறித்து சென்ற திருவொற்றியூர் காவல்துறையினரை கிராம மக்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸின் பெயர், இந்த நில பத்திர பறிப்பு விவகாரத்திலும் சிக்கியதை அடுத்து, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்.
சட்டத்தின் கண்களை கட்டிவிட்டு, புனிதமான காக்கி சீருடையை கூலிப்படை ஏவலுக்கு தாரைவார்த்த சம்பவம், சென்னை காவல் ஆணையரகத்தின் திருவொற்றியூர் எல்லை பகுதியில் அரங்கேறியிருக்கிறது.

25 ஆண்டுகளாக...
சென்னை, திருவொற்றியூரை சேர்ந்த குப்புராவ் என்பவர், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரிஜினல் பத்திரத்தை திருவூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். ஆனால், கால் நூற்றாண்டாக கடனை அடைக்காமல் குப்புராவ் இழுத்தடித்ததால், அந்த பத்திரம் ராமதாஸின் குடும்பத்தினரிடமே இருந்துள்ளது.
இந்த சூழலில்தான், ராமதாஸின் மகனும், வழக்கறிஞருமான ஸ்ரீதர் பாபுவை, கெளஷிக் என்ற இளைஞர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தான் குப்புராவின் உறவினர் என்றும், நிலத்தின் அடமான பணத்தை திருப்பி தந்துவிட்டு பத்திரத்தை மீட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதை துளியும் சந்தேகப்படாமல் நம்பிய ஸ்ரீதர் பாபு, அவரை தனது வீட்டிற்கு வரும்படி அழைக்கவே, கடந்த 9ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், கெளஷிக் மற்றும் அவருடன் வந்த 3 நபர்கள், ஸ்ரீதர் பாபுவின் வீட்டிற்கு வந்தனர்.

நில பத்திரத்துடன்...
பத்திரத்தின் ஒரிஜினலை பார்த்துவிட்டு பணம் தருகிறோம் என்று கூறி, சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக பேசிய அவர்கள், திடீரென ஸ்ரீதர் பாபுவையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, பத்திரத்துடன் தப்பியோட முயன்றுள்ளனர்.
இதில், கெளஷிக் பத்திரத்துடன் காரில் தப்பிச்செல்ல, எஞ்சிய இருவரை ஸ்ரீதர் பாபுவும் ஊர் பொதுமக்களும் மடக்கி பிடித்து துவைத்து எடுத்தனர். அப்போது, தாங்கள் மாட்டிக்கொண்டதை உணர்ந்த இருவரும், ’நாங்கள் சாதாரண ஆட்கள் இல்லை, திருவொற்றியூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள்,’ என்று, தங்களது அடையாள அட்டையை காட்டி தப்பிக்க முயன்றனர்.

சிக்கிய காவலர்கள்...
உடனே, ஸ்ரீதர் பாபு செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார், பிடிபட்ட இருவரும் திருவொற்றியூர் காவலர்கள் என்பதை உறுதிசெய்தனர். திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நிலப் பிரச்சினை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், உயர் அதிகாரியின் உத்தரவால்தான் தாங்கள் பத்திரத்தை பெற வந்ததாகவும், ஆனால் பத்திரத்தை பெற்றவுடன் புகாரளித்த தரப்பினரே அதை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதனிடையே, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுதிரண்டு, தங்கள் கைக்கு பத்திரம் வராமல், இந்த திருட்டு போலீசாரை விடமாட்டோம் என்று சிறைபிடித்தனர். நிலைமை கைமீறி போவதை உணர்ந்த பூந்தமல்லி ஆய்வாளர், தப்பியோடிய கெளஷிக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ’ஒழுங்கு மரியாதையாக ஒரு மணி நேரத்திற்குள் பத்திரத்துடன் வரவில்லை என்றால், உன் குடும்பத்தையே நேரில் வந்து கைது செய்து அழைத்து வந்துவிடுவேன்,’ என்று எச்சரித்தார்.
2 மணி நேரமாக சிறைபிடிப்பு
அவர் மிரட்டல் விடுத்ததும், வேறு வழியின்றி கெளஷிக் பத்திரத்தை மீண்டும் கொண்டுவந்து ஒப்படைத்திருக்கிறார். பத்திரம் மீட்கப்பட்டதும், அவரை கைது செய்த போலீசார், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டிருந்த திருவொற்றியூர் காவலர்களை மீட்டனர்.
பத்திரக்கொள்ளை பரபரப்புக்கு மத்தியில் தான், இந்த சட்டவிரோதக் கொள்ளை நாடகத்திற்கும், அராஜகத்திற்கும் முழுகாரணம், திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் அலெக்ஸ் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல் ஆய்வாளரின் வரலாறு...
கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் காவல் நிலைய பொறுப்புக்கு வந்த ஆய்வாளர் அலெக்ஸின் வரலாற்றை அலசி பார்த்தால் Black Mark நிறைந்ததாகவே இருக்கிறது. அலெக்ஸ் பதவியேற்ற சில மாதங்களிலேயே, அரசு பள்ளி மாணவன் கொடூரமாக அடித்து கொ*லப்பட்டார். தன் லிமிட்டில் நடந்த அந்த சம்பவத்திலும் அவர் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துவிட்டு அடுத்த நாளே படுகொ* செய்யப்பட்ட பிரதீப் ராஜ் வழக்கிலும் இந்த ஆய்வாளர் அலெக்ஸின் கை ஓங்கியிருப்பதாக புகார் முன்வைக்கப்படுகிறது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரதீப் ராஜ் புகாரளித்ததை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாமல், காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து பேரம் பேசி, கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மிரட்டிய இன்ஸ்பெக்டர் காத்திருப்பு
அதுமட்டுமின்றி, உன்னை அடித்து கொ* செய்து திருச்செந்தூர் கடலில் கரைத்து விடுவேன் என்றும் பிரதீப் ராஜை மிரட்டியதாக கொ* செய்யப்பட்ட பிரதீப் ராஜே குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், பத்திர விவகாரத்திலும் இன்ஸ்பெக்டர் அலெக்ஸின் பெயர் அடிப்பட்டதால், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தின் பார்வையில் பார்த்தால், வேறு காவல் எல்லைக்குள் நுழைந்து விசாரணை நடத்த Local Policeக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை சட்ட விதிகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, திருவொற்றியூர் போலீசார் ரகசிய கூலிப்படையை போல செவ்வாப்பேட்டை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, நிலப் பிரச்சினை என்பது ஒரு சிவில் தகராறாக இருக்க, சட்டப்படி சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வேண்டிய முறையை விட்டுவிட்டு, ஒரு வழக்கறிஞரின் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரை தாக்கி பத்திரத்தை பறித்து, அதை உடனடியாக எதிர்தரப்பு நபர்களிடமே ஒப்படைத்து தப்பியோட செய்துள்ளனர். அப்படியென்றால், இந்த சட்டவிரோத கைவரிசைக்கு பின்னால், டீலிங் ஏதும் பேசப்பட்டிருக்கிறதா? என்ற ஸ்ட்ராங்கான கேள்வி எழுந்திருக்கிறது.
பின்னணியில் யார்?
அதேநேரம், இந்த அராஜகத்தில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மட்டுமே தனியாக காய் நகர்த்தினாரா, அல்லது இதற்கு பின்னால் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் யாரேனும் இன்வால்வ் ஆகியிருக்கின்றனரா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், காவல்துறை உண்மையை வெளியே கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved