Also Watch
Read this
By: Web Team
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தனியார் மனமகிழ் மன்றத்தை மூட சொல்லி த.வெ.க.வினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர் ஒருவர், போலீசாரின் கையை குறி பார்த்து கடித்து வைத்த சம்பவம் அரங்கேறியது. ஆக்ரோஷத்தின் உச்சமாக போலீஸின் கையை பார்த்து பாய்ந்து சென்று கடித்த த.வெ.க. தொண்டர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, கம்பி எண்ண வைத்திருக்கிறது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என பழமொழி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், த.வெ.க. தொண்டரின் கடி காட்சியை பார்த்த பின்னர், வல்லவனுக்கு பல்லும் ஆயுதம் என பழமொழியை மாற்றி தான் எழுத வேண்டும்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளிக்கு அருகிலேயே செயல்பட்டு வரும் HONEY BEE என்ற தனியார் மனமகிழ் மன்றத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தினரின் போராட்டம் நடை பெற்றது. போராட்டம் நடத்திய த.வெ.க.வினர் தனியார் மதுபான கூடத்தை நோக்கி முற்றுகையிட சென்றனர். மனமகிழ் மன்றத்தின் தகர கதவு அருகே கயிறு கட்டி த.வெ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தி பார்த்தனர். ஆனால், போலீசாரை தள்ளி விட்டு விட்டு முன்னேறிய த.வெ.க.வினர், மதுபான கூடத்திற்குள் செல்ல முயற்சி செய்தனர். அப்போது, போலீசார் தடுக்க முயன்ற நிலையில், போலீசாருக்கும், த.வெ.க.வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு பக்கம் தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒரு த.வெ.க. தொண்டர் மட்டும் ஆவேசமாக போலீசாரை மீறி, மனமகிழ் மன்றத்தின் கதவு மீது ஏறி உள்ளே செல்ல முயன்றார். அப்போது, அங்கு நின்ற போலீசார் இருவர் காலை பிடித்து இழுத்து கஷ்டப்பட்டு அந்த தொண்டரை கீழே இறக்கியதோடு, கையை நெஞ்சிலேயே வைத்து தள்ளினர்.
போலீசார் கடுப்பாகி அந்த தொண்டரின் நெஞ்சிலும், கழுத்திலும் கையை வைத்து போலீசார் கண் மூடித்தனமாக தள்ள, த.வெ.க. தொண்டருக்கு அடக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் வந்தது.
பதிலுக்கு போலீசாரை தாக்க வேண்டும் என முடிவெடுத்த அந்த த.வெ.க. தொண்டருக்கு அப்போதைக்கு கையில் இருந்த ஆயுதம் பற்கள் தான். என்ன நினைத்தாரோ? தன்னை நோக்கி வந்த போலீஸின் கையை குறி பார்த்து வெறிப்பிடித்தது போல வாயால் குதற தொடங்கினார் அந்த த.வெ.க. தொண்டர்.
முன்னேறி வந்த தன்னை உள்ளே செல்ல விடாமல் தடுத்த ஆத்திரத்தில் த.வெ.க. தொண்டரும், கையில் கடி வாங்கிய விரக்தியில் போலீசாரும் இருக்க, ஒரு வழியாக போராட்டத்தை கட்டுப்படுத்தவே பெரும் போராட்டம் ஆனது.
தலைமைக் காவலருக்கே கடி வைத்தியம் கொடுத்த த.வெ.க. தொண்டர் வீராசாகனூர் பகுதியை சேர்ந்த ஜெமினி என்பது விசாரணையில் தெரியவர, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
மனமகிழ் மன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதெல்லாம் நல்ல விஷயமாக இருந்தாலும், கட்டுப்படுத்த வேண்டியது போலீசின் கடமை என்பது அறிந்து அந்த த.வெ.க. தொண்டர் கொஞ்சம் ஆவேசத்தை குறைத்துக் கொண்டிருந்தால் இப்படி கடி வைத்தியத்தால் கம்பி எண்ணும் நிலை வந்திருக்காது என்பதே எல்லாருடைய கருத்து...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved