சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் விழாவில், மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் தமது ஆட்சியில் தொடங்கியது என வரலாறு எழுதப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் சார்ந்த திட்டங்கள் மூலம் கிடைத்த பலன்களை பறைசாற்றும் வகையில் இருந்தது தான் இந்த வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி. சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களின் அதிரடியான சிலம்பாட்டம், வாள் சண்டையுடன் கோலாகலமாக தொடங்கிய விழாவில், முழுக்க முழுக்க பெண் கலைஞர்கள் மட்டும் பங்கேற்ற நாதஸ்வர கச்சேரி ரசிக்கும் வகையில் இருந்தது. பின்னர், மேடையை அலங்கரித்த பெண் கமாண்டோக்கள், கண்ணை துணியால் கட்டிக் கொண்டே அதிநவீன துப்பாக்கிகளை கையாண்டு சாகசம் காட்டினர். எந்த கவன சிதறலும் இல்லாமல் துப்பாக்கியை பிரித்து மீண்டும் சேர்த்து கமாண்டோக்கள் காட்டிய சாகசம் புருவத்தை உயர்த்த வைத்தது.தொடர்ந்து, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை மேடையேற்றி பேச வைத்து கௌரவப்படுத்தியது தமிழ் பெண்கள் வெல்லும் நிகழ்ச்சி.அப்போது, பெண் கவுன்சிலர் ஒருவர், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்த தன்னை பார்த்து, போலீசார் ஒருவர் மேடம் என அழைத்தது பெருமையாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட அரங்கமே கைத்தட்டலில் மூழ்கியது.இதேபோல, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் மட்டும் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து பீகார் மாநிலத்தை சேர்ந்தவரின் துண்டான 2 கைகளை ஒட்ட வைத்தது தொடங்கி, ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநரான இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி வரை எல்லாரும் மேடையேறி தாங்கள் கடந்து வந்த பாதைகள், அனுபவங்களை பகிர்ந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது.தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று நல்ல உத்தியோகத்தில் இருக்கும் இளம் பெண்களும் தங்களது கரடு முரடான கசப்பான வாழ்க்கையில் இருந்து மீண்டு வந்தது குறித்து பகிர்ந்து கொண்டது உத்வேகமாக இருந்தது.இதேபோல, வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் பயனடைந்த இலங்கை தமிழர் பெண் ஒருவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அப்பா என நெகிழ்ச்சியோடு அழைத்ததோடு, அப்பா என எழுதப்பட்டு இருந்த பிரத்யேக கைக்குட்டையை பரிசளித்தார்.சாதனை பெண்களின் கதைகளுக்கு மத்தியில் இன்னிசையான இசை கச்சேரியும் நடைபெற பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்கள் மெய் மறந்து போயினர்.இதனை தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2ஆம் கட்டமாக கூடுதலாக 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பெண்களும் மகளிர் உரிமைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விதிகள் தளர்த்தப்பட்டு விடுபட்ட மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் வழங்கப்பட்ட நிலையில், அதிலிருந்து 17 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என மகளிர் உரிமைத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லாருடைய தன்னம்பிக்கை கதைகளை கேட்டு நெஞ்சம் உருகி நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டார்.வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்தது தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு திட்டத்தின் வெற்றியே, அந்த திட்டம் மூலம் மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பது தான் என்றார்.திமுக அரசின் மகளிர் சார்ந்த திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல திட்டங்களை இலவசங்கள் என கொச்சைப்படுத்துவோர் கூட மகளிர் உரிமை தொகையை அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்த தொடங்கி விட்டார்கள் என்றார்.ஆயிரம் ரூபாய் என்பது ஒரு தொடக்கம் மட்டும் தான் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நடை போட நிச்சயம் உரிமைத் தொகை உதவும், பெண்களின் உரிமையும் உயரும் எனவும் கூறினார்.