news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 25 ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி
tv

Also Watch

25 ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி

கானத்தூர் போலீசாரின் பக்கா ஆக்சன்

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25 ஆடுகளை அபேஸ் செய்த கும்பல்

சென்னை, ஈசிஆர் சாலையில் சொகுசு காரில் வலம் வந்து, ஆடுகளுக்கு அன்போடு உணவளித்து அபேஸ் செய்த விசித்திரக் கும்பலைத் தனிப்படை போலீசார் கூண்டோடு தூக்கியுள்ளனர்.

ஒரு கிலோ ஆட்டுக்கறி விற்கும் விலைக்கு, முழு ஆடே தள்ளுபடி விலைக்குக் கிடைத்ததால் கறிக்கடைக்காரரே திருடனாக மாறிய இந்த ஆட்டு வித்தையின் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்,’ என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். ஆனால், இங்கு ஆடு பசியோடு இருக்கிறதே என்று உணவளிப்பதை போல், கருணை காட்டி அதனை அபேஸ் செய்வதை தொழிலாக செய்து வந்த ஒரு கும்பல், காவல்துறையிடம் சிக்கி கம்பி எண்ணும் சுவாரஸ்யம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாயமான ஆடுகள்...
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சள் போடு பகுதியில், வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடுகள் கடந்த இரண்டு மாதங்களாக மர்மமான முறையில் காணாமல் போயின. செல்லமாக வளர்த்த ஆடுகள் திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கானத்தூர் காவல் நிலையத்தில் தங்களின் குமுறலை புகாராகக் கொட்டினர்.

களத்தில் இறங்கிய தனிப்படை முதலில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்தபோது தூக்கிவாரிப்போட்டது. இதற்கு காரணம், திருடர்கள் சொகுசு காரில் வந்து ஹைடெக் ஆக ஆடுகளை அபேஸ் செய்து சென்றது தான்.

சொகுசு காரில் வந்து...
சாலையில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளுக்கு, காரில் இருந்தபடியே ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து உணவு கொடுத்து, ஆசைகாட்டி அப்படியே காருக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆகியுள்ளது.

இந்த ஆடு திருடர்களைப் பிடிக்கப் போலீசார் வலைவீசியபோது, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த நாய் மணிகண்டன் மற்றும் கதிரவன் ஆகிய இருவரும் கொத்தாக சிக்கினர். இவர்களிடம் போலீசார் தங்களின் பாணியில் விசாரித்தபோது பல உண்மைகள் வெளிவந்தன.

ஏற்கெனவே ஆடு திருடி...
இதில், நாய் மணிகண்டன் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை விற்ற வழக்கில் ஜெயிலுக்குப் போனதும், கதிரவனோ அதே கானத்தூர் ஸ்டேஷனில் இரண்டு முறை ஆடு திருடி ஹாட்ரிக் அடிக்கக் காத்திருந்ததும் தெரியவந்தது.

முதலில் பைக்கில் வந்து, எந்தெந்த ஏரியாவில் கொழு கொழு ஆடுகள் இருக்கின்றன என்பதை நோட்டமிடும் இவர்கள், பின்னர் காரை எடுத்துக்கொண்டு போய், கதவைத் திறந்து வைத்து ஆடுகளுக்குப் பிடித்த உணவைக் காட்டி கடத்தி செல்வது தான் இவர்களின் பாணி.

சிக்கிய கறிக்கடை உரிமையாளர்
பின்னர் திருடிய ஆடுகளை சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் மோத்தி பாபுவிடம் வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். ஒரு கிலோ ஆட்டுக்கறியே 1000 ரூபாய்க்கு விற்கும் இந்த காலத்தில், ஒரு முழு ஆடே 2 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைத்தால் எந்த கறிக்கடைக்காரருக்குத் தான் நாக்கு ஊறாது?

இருவரும் கூறிய ரூட்டை கேட்டு, ’இது நல்ல பிசினஸா இருக்கே?’ என்ற மோத்தி பாபு, தானும் அந்த ஆட்டு மந்தை கூட்டணியில் இணைந்து களத்தில் இறங்கியுள்ளார். மோத்தி பாபு மீது ஏற்கெனவே 2022ல் வேதாரண்யம் ஸ்டேஷனில் ஆடு திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது தனிக்கதை.

மூன்று பேர் கூட்டணியில்...
மூன்று பேர் கொண்ட கூட்டணி முட்டுக்காடு, கானத்தூர், பனையூர் பகுதிகளில் இதுவரை 25க்கும் மேற்பட்ட ஆடுகளை அபேஸ் செய்துள்ளனர். இதையடுத்துப் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், 15 ஆடுகள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆடுகளைத் திருடி உல்லாசமாக வலம் வந்த நாய் மணிகண்டன், கதிரவன், மோத்தி பாபு ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காரில் வந்து ஆடு திருடியவர்களின் கதை, இப்போது கம்பி எண்ணுவதில் வந்து முடிந்துள்ளது.

Related Link
சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம், வெறும் 22 நிமிடங்களில் அரங்கேறிய சம்பவம்

சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம், வெறும் 22 நிமிடங்களில் அரங்கேறிய சம்பவம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved