Also Watch
Read this
By: Fyrose Banu

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் வைகை ஆற்றில் அமைந்துள்ள பேரனை நீர்த்தேக்கம் ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களும் சின்னாளப்பட்டி பேரூராட்சி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.


இந்த நிலையில் கடந்த நான்கு மாதமாக ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் வைகை ஆற்றில் அமைந்துள்ள பேரனை நீர் தேக்கம் ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களும் வறண்டு போனதால் சின்னாளப்பட்டி பொதுமக்களுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடை குறைக்க ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே உள்ள கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.


இருந்தபோதிலும் 18 வார்டுகளிலும் உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த அளவு நேரம் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மேலும் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஒரு குடம் குடிதண்ணீர் 20 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரையிலும், மேலும் வீட்டு உபயோகத்திற்கு ஒரு டிராக்டர் தண்ணீர் ஆயிரம் ரூபாய் முதல் 1200 ரூபாய் வரையிலும் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.


இதனை அடுத்து சின்னாளப்பட்டி பேரூராட்சி பொதுமக்கள் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இது குறித்து பல முறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறு அமைத்து உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பேரூராட்சி பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved