Also Watch
Read this
By: Fyrose Banu

சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாடலாத்திரி சீயாத்தம்மன் திருக்கோயிலில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மாண்ட தேர் திருவிழா மற்றும் தேர்பவணி பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக 120-க்கும் மேற்பட்ட வகையான சீர்வரிசைப் படையல்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் 100க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் நடனம் ஆடியது அனைவரும் கவனத்தையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து, மலர் அலங்காரங்களுடன் தயார் செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர், மேளம் தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பவணியாக கொண்டு செல்லப்பட்டது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்து, அம்மனை தரிசனம் செய்தனர். தேர்பவணி சென்ற வீதிகளில் பக்தர்கள் வீடுகளின் முன்பு ஆடு, கோழி உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக பலியிட்டு, பல்வேறு தின்பண்டங்கள் மற்றும் உணவுப் படையல்களை வைத்து வழிபாடு செய்தனர். குடும்ப நலன், நோய் நீக்கம், வேண்டுதல்கள் நிறைவேறுதல் உள்ளிட்டவற்றுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

தேர் வீதியுலா சென்ற வழியெங்கும் ஓம் சக்தி பராசக்தி என முழக்கமிட்டு பக்தர்கள் “அம்மன் அருள் வேண்டும்” என வழிபட்டனர். இதனால் கொரட்டூர் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த சிறப்பு தேர் திருவிழாவை முன்னிட்டு,கொரட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கொரட்டூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved