news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னையில், சொத்து வரி ஷாக், 10 மடங்கு உயர்வா?
tv

Also Watch

சென்னையில், சொத்து வரி ஷாக், 10 மடங்கு உயர்வா?

3.5 லட்சம் வீடுகளுக்கு நோட்டீஸ்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், வரியை உயர்த்தவில்லை என்றும், பரப்பளவை மறைத்தவர்களை ட்ரோன் மூலம் கண்டறிந்து மறுதிப்பீடு மட்டுமே செய்து உள்ளதாகவும், மாநகராட்சி விளக்கமளித்திருக்கிறது. இருப்பினும் பொதுமக்களின் ஆட்சேபனையை தொடர்ந்து, சொத்து வரி மாற்றியமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில்...
சென்னையில், கடந்த சில நாட்களாகவே, ‘சொத்து வரி எகிறிவிட்டது, பல மடங்கு உயர்ந்துவிட்டது,’ எனப் பொதுமக்கள் தரப்பில் சொல்லப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும், அதைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்புகளும் மாநகரம் முழுவதையும் ஒருவித பரபரப்பில் வைத்திருக்கிறது. நேற்று வரை ஆயிரங்களில் கட்டிய வரியை, திடீரென பல்லாயிரக்கணக்கில் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பினால், நாங்கள் எங்கே போவது? என அண்ணா நகர் முதல் அடையாறு வரை வீட்டு உரிமையாளர்கள் கதறும் சூழல் நிலவுகிறது.

பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம்
இன்னொரு பக்கம், நாங்கள் பொதுவான சொத்து வரி விகிதத்தை உயர்த்தவே இல்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
உண்மையிலேயே சென்னை மாநகராட்சி தன்னிச்சையாக சொத்து வரியை பல மடங்கு உயர்த்திவிட்டதா? காரணம் என்ன? என்பதை ஆழமாக பரிசீலிக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.

தன்னிச்சையாக வரியை உயர்த்த முடியாது
சட்டப்பூர்வமான பின்னணியை பொறுத்தவரை, சென்னை மாநகராட்சி சட்ட கட்டமைப்புக்கு வெளியே தன்னிச்சையாக சொத்து வரியை உயர்த்திவிட முடியாது என்பதே நிதர்சனம். மாநகராட்சியின் சொத்து வரி மதிப்பீடு, வசூல் நடவடிக்கை அனைத்துமே தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் 2023ல் இயற்றப்பட்ட அதன் விதிகளின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. இதில், மிக முக்கியமான திருத்தமாக, கடந்த 2024ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை மூலமாக, பொதுவான வரி சீரமைப்பு நடைபெறாத ஆண்டுகளில், சொத்து வரியின் ஆண்டு மதிப்பை 6 சதவீதமாக உயர்த்தும் நடைமுறை அதிகாரப்பூர்வமாக கொண்டு வரப்பட்டது. இதற்காக மாநகராட்சி மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

வருடாந்திர 6% வரி உயர்வு - ஏன்?
மேலும், 15ஆவது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள், அதன் திட்டங்களை பெறுவதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த வருவாயை பெருக்க வேண்டும் என்ற கட்டாய சூழலும் நிலவுகிறது. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வரி வசூலை முறைப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அப்படியென்றால், வரி விகிதம் உயர்ந்து, சிலருக்கு மட்டும் 5 மடங்கு முதல் 10 மடங்கு வரை வரி உயர்ந்து நோட்டீஸ் வந்தது எப்படி? என்ற கேள்வி எழுகிறது. இங்கேதான் வரி விகித உயர்வு என்பதற்கும், தனிப்பட்ட சொத்து மறுமதிப்பீடு என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

முறைகேடுகள் அம்பலம்
12 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி மாநகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது என்னவென்றால், மாநகரம் முழுவதும் பொதுவான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாறாக, நீண்டகாலமாக சரியாக மதிப்பிடப்படாமல் குறைந்த வரியே செலுத்தி வந்த சொத்துகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்து, அவற்றுக்கான சரியான புதிய மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே, குறிப்பிட்ட சில சொத்துகளுக்கு மட்டும் செலுத்த வேண்டிய இறுதி வரித்தொகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த அதிரடி மறுமதிப்பீட்டின் பின்னணியில் சென்னை மாநகராட்சி ரகசியமாக பயன்படுத்திய தொழில்நுட்ப ஆயுதம்தான் GIS, ட்ரோன் சர்வே. வான்வழியாக ட்ரோன்களை பறக்கவிட்டு, பெறப்பட்ட வரைபடங்களை ஏற்கெனவே உள்ள சொத்து வரி தரவுகளோடு ஒப்பீடு செய்ததில் பகீர் முறைகேடுகள் அம்பலமாகின.

3.5 லட்சம் சொத்துகளுக்கு...
மின்சார வாரியத்தின் டேட்டா, ஜிஎஸ்டி தகவல், கட்டட உரிமையாளர்களின் சுய பிரகடனங்களை வைத்து அலசியதில், ஒரு மாடிக்கு மட்டும் வரி செலுத்திவிட்டு 2,3 மாடிகளை கட்டி மாநகராட்சிக்கு அறிவிக்காமல் விட்டது, கட்டடத்தின் உண்மையான பரப்பளவை மறைத்தது போன்ற பல முரண்பாடுகளை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இவ்வாறு கண்டறியப்பட்ட சுமார் 3 புள்ளி 49 லட்சம் சொத்துகளுக்கே தற்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டு புதிய வரி கேட்பு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், இதற்கான புள்ளிவிவர விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிலருக்கு மட்டுமே பல மடங்கு வரி உயர்வு
மாநகராட்சி அளிக்கும் விளக்கத்தின்படி, மறுமதிப்பீடு செய்யப்பட்ட 3 புள்ளி 4 லட்சம் குடியிருப்பு சொத்துகளில் 55 சதவீத கட்டடங்களுக்கு உயர்ந்துள்ள வரித் தொகை ஆயிரத்துக்கும் குறைவுதான் என்றும், 95 சதவீத சொத்துகளுக்கு வரி உயர்வு 5 ஆயிரத்துக்குள் மட்டுமே இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக கட்டடப் பரப்பளவையோ அல்லது பயன்பாட்டையோ மறைத்து மிக குறைந்த வரி செலுத்தி வந்த சில சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே இந்த மல்டிபிள் மடங்கு வரி உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது மாநகராட்சியின் வாதம்.

மேல்முறையீடு செய்யலாம்
இருப்பினும், கொரோனா காலத்தில் தாமதமான இந்த மறுமதிப்பீட்டு நடவடிக்கை தற்போது திடீரென அமல்படுத்தப்படும்போது GIS, ட்ரோன் சர்வேயின் கணக்கீடுகளில் தவறுகள் இருக்க வாய்ப்புள்ளதாக சொத்து உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். இதற்காக, மாநகராட்சி தரப்பில் ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. புதிதாக நோட்டீஸ் கிடைத்துள்ள உரிமையாளர்கள் அதில் தவறு இருப்பதாக கருதினால், நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் தங்களின் பழைய மற்றும் புதிய பரப்பளவு ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும், மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு...
மொத்தத்தில், சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்திவிட்டது என்ற குற்றச்சாட்டு முழுமையாக உண்மையல்ல என்றபோதிலும், இந்த மறுமதிப்பீடு நடவடிக்கையின் கணக்கீடுகள் எந்த அளவுக்கு துல்லியமானது என்பதை மாநகராட்சி வெளிப்படைத்தன்மையுடன் நிரூபிக்க வேண்டும் என்பதே சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நிறுத்திய சென்னை மாநகராட்சி
திருத்திய வரி மதிப்பீடு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவித்து உள்ளார்.

இதன்படி, வரித்தொகை மாற்றி அமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவிற்கே வசூலிக்கப்படும் என்றும், திருத்திய வரித்தொகையை ஏற்கெனவே செலுத்தியவர்களுக்கு, அந்த தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Link
'Gold' பிஸ்கட் கேட்கும் ஆஃபிசர்ஸ்? கூண்டோடு சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள்

'Gold' பிஸ்கட் கேட்கும் ஆஃபிசர்ஸ்? கூண்டோடு சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திப்பாராவில் முடங்கும் போக்குவரத்து, 50 மீட்டருக்கு பதில் 5 கிமீ சுற்றும் நிலை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved