Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதிய பேருந்து நிலையம் எதிரே இருந்த ஞாயிற்றுக்கிழமை சாலையோர கடைகளை நகராட்சி நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகற்றியது.
25.11.2026 அன்றய உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வணிகக் குழு தீர்மானத்தை காவல்துறை பாதுகாப்புடன் நிறைவேற்றுவதாக நகராட்சி நிர்வாகம் கூறியதை ஏற்காத சாலையோர வியாபாரிகள் ஏ.ஐ.டி.யு.சி சங்கம் சார்பாக இன்று அவிநாசி நகராட்சி அலுவலகத்தின் வளாகத்திற்குள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து முற்றுகையிட்டு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது அமைக்கப்பட்ட வணிகக் குழுவை (வெண்டிங் கமிட்டி) கலைக்க வேண்டியும், நீதிமன்ற உத்தரவில் இல்லாத அம்சங்களை கூறி நகராட்சி நிர்வாகம் அராஜகம் செய்வதாக கூறியும் கோசங்கள் எழுப்பி வந்தனர்.
சாலையோர வியாபாரம் செய்யும் பெண்கள் நகராட்சிஅதிகாரிகளிடம் தங்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையாக நகராட்சி பொறுப்பு ஆணையர் பாலமுருகன், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் நீதிமன்ற உத்தரவு படி வியாபார தடை பகுதிகளில் சாலையோர கடைகள் அமைக்காமல் இருக்க வேண்டும் என்றும், மேலும் ஒரு வார காலத்திற்குள் வணிகக்குழு கூட்டம் கூட்டப்பட்டு அதில் சுமூகமான தீர்மானத்தை நிறைவேற்ற வழிவகை செய்து நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட சாலையோர வியாபாரிகள் நாளை ஒரு நாள் கடைகள் போட மாட்டோம் என கூறி விரைவில் சுமூக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தங்களது
போராட்டத்தை கைவிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved