Also Watch
Read this

நெல்லை பல்கலையில் அனைவருக்கும் பட்டம் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் அர்லேகர் வருத்தம் தெரிவித்தார். தவறான புரிதல் காரணமாக பிரச்சனை ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

பட்டமளிப்பு விழாவில்...
திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.வி.அர்லேக்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது;
பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற வந்த அனைத்து மாணவர்களையும் அரங்கிற்குள் அமர வைக்க முடியாததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில மாணவர்கள் அரங்கிற்கு வெளியே இருந்தனர். அனைவருக்கும் போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டியது பல்கலைக்கழக வேந்தராகிய எனது பொறுப்பு. அடுத்த பட்டமளிப்பு விழாவை இன்னும் பெரிய அரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று துணைவேந்தரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களின் பொறுமை...
மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமும் கூட. இன்றைய இளம் தலைமுறையைப் பற்றி பல்வேறு தவறான கருத்துகள் கூறப்படுகின்றன.
ஆனால், சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தபோது, அங்கிருந்த இளைஞர்களையும், இங்கு பட்டம் பெறும் மாணவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழக மாணவர்களின் பொறுமை, ஒழுக்கம் மற்றும் முதிர்ச்சியை பெருமையுடன் காண்கிறேன். பட்டத்தை வேந்தரிடம் இருந்து நேரடியாகப் பெற வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பது அவர்களின் உரிமை. அதற்காக அவர்கள் கடுமையாக உழைத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர். . மாணவர்களின் உழைப்பை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.

மாணவர்களால் மகிழ்ச்சி
இன்றைய இளம் தலைமுறையினர் பெற்றோர், ஆசிரியர், சமூகம் மற்றும் நாட்டைப் பற்றி என்ன சிந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். மாணவர்களுடன் நேரடியாக சந்தித்து பேசுவதில் எனக்கு பெருமை.
மாணவர்கள் "வணக்கம்" என்று வரவேற்று, எனது கைகளால் பட்டம் பெறுவதில் பெருமை கொள்வதாக கூறியது மகிழ்ச்சி அளித்தது. மாணவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுடன் நெருக்கமாக உரையாடுவதே எனது நோக்கம்.

சமூக நலனுக்காக...
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது பிரதமரின் கனவு
மட்டுமல்ல, நாட்டு மக்களின் கனவாகவும் மாற வேண்டும். அந்த இலக்கை அடைய இன்றே செயல்பட வேண்டும். எந்த ஒரு பணிக்கும் அரசுத் திட்டங்களுக்காக மட்டுமே காத்திருக்காமல், "நான் என்ன செய்யப் போகிறேன்?" என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் தகவல் மட்டுமல்ல, அறிவும் திறமையும் இருப்பதால் அதை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். மாணவர்களுடன் ஒரு நாள் முழுவதும் கலந்துரையாட விரும்புகிறேன். மேடையில் இருந்து பேசுவதை விட மாணவர்களுடன் நேரடியாக உரையாடுவதில் தான் திருப்தி கிடைக்கும். தமிழ்நாட்டு மாணவர்களும், இந்திய இளைஞர்களும் நாட்டை முன்னேற்றும் ஆற்றல் கொண்டவர்கள்.
இவ்வாறு ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆம் இடம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3ஆவதாக பாடப்பட்டது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக ஆளுநர் அர்லேகர் தலைமையில் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.