Also Watch
Read this
சென்னை மாநகர பேருந்தில் ஏறிய இளம்வயது மார்டன் மங்கை மதுபோதையில் பயணிகளை பாடாய்படுத்தி எடுத்ததோடு ஒருவரின் கன்னத்தில் பளார் என அறைவிட்டும், ஒரு பெண்ணின் தலைமுடியை வளைத்து பிடித்து இழுத்தும் அத்துமீறினார். "தாராளமாக வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள் செல்லக்குட்டி," என பயணிகளை கிண்டலடித்து எல்லைமீறிய இளம்பெண்ணை சமாளிக்க முடியாத நடத்துநரும், ஓட்டுநரும் கடைசியில் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மது போதையின் உச்சம்
சென்னை சைதாப்பேட்டையில் இருந்து ஆலந்தூர் வழியாக மாநகர சொகுசு பேருந்து ஒன்று இரவில் சென்று கொண்டிருந்தது. அதில், 20 வயது மதிக்கத்தக்க அல்ட்ரா மார்டன் இளம்பெண் ஒருவர் ஏறினார்.

அருகில் செல்லாமலேயே அவர் மதுவில் தான் குளித்திருப்பதாக கண்டுபிடிக்கும் அளவிற்கு போதையின் உச்சத்தில் இருந்த அந்த இளம்பெண், பேருந்திற்குள் அங்குமிங்கும் உலாவியபடியே உளறிக்கொண்டிருந்தார்.

ஆபாச வார்த்தைகளால்...
”நான் என்ன தவறு செய்தேன்,” என்ற ஒற்றை கேப்ஷனை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த இளம்பெண்ணை, பயணிகள் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒருசிலர் மட்டும் அமைதியாக இருக்குமாறு கூறினர். ஆனால், ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்த இளம்பெண் எல்லை மீறினார்.

இதனிடையே, நடத்துநர் டிக்கெட் கேட்க பத்ரகாளியாய் மாறி தகாத வார்த்தையில் அவரையும் தாளித்தார் அந்த இளம்பெண். அதனால், அமைதியான நடத்துநர், ‘டிக்கெட்கூட எடுக்க வேண்டாம்,’ எனக்கூறி அந்த பெண் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்குமாறு கூறினார். ஆனால், தன்னுடன் வந்த பெண் எங்கே? என ரகளை செய்து இறங்க மறுத்த இளம்பெண் பேருந்தின் டேஷ்போர்டில் அமர்ந்து அழ ஆரம்பித்தார்.

ஓகே செல்லக்குட்டி
தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் எந்த தவறும் செய்யவில்லை, சத்தியமாக சொல்கிறேன் தன்னை அடித்தவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் என சம்மந்தமே இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தார். கொஞ்சம் பொறுமை அவசியம் என நைசாக பேசி டேஷ்போர்டைவிட்டு சிலர் அழைத்து வந்தனர்.

ஆனால், அதன்பிறகு தான் மார்டன் மங்கை, தூள் பட வில்லி சொர்ணா அக்காவாகவே மாறினார். தன்னை வீடியோ எடுக்கிறாயா? ஓகே செல்லக்குட்டி எடுத்துக்கோப்பா, போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறாயா போய்க்கோப்பா? என நக்கலடித்த இளம்பெண், தட்டிக்கேட்டவர்களை தடாலடியாக அடிக்க பாய்ந்தார்.

அடி, உதை, அட்ராசிட்டி
மகள் வயதில் இருக்கிறாரே? மதுவால் இப்படி அசிங்கப்படுகிறாரே? என வருத்தப்பட்ட ஒரு பயணி, ’உங்கள் அப்பா இதனை பார்த்தால் வருத்தப்படுவார்,’ என அறிவுரை கூறினார். அதனால், டென்ஷனான இளம்பெண் சட்டென அந்த நபரின் கன்னத்தில் பளார் என அறைவிட்டு பயணிகளை அதிர வைத்தார்.

நிலைமை கை மீறுகிறது என நினைத்த ஒரு பெண்மணி இளம்பெண்ணை அமைதியாக்க முயன்றார். ஆனால், அவரது பேச்சை மட்டும் கேட்டு இளம்பெண் பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவாரா என்ன? அடுத்த நொடியே அந்த பெண்மணியின் தலைமுடியை கொத்தாக கையோடு பிடித்து இழுத்து எல்லைமீறினார்.

வீடியோவை பார்த்து...
இளம்பெண்ணை ஒரு இடத்தில் அமைதியாக அமர வைக்க முடியாமலும், இறக்கிவிட முடியாமலும் அவதிப்பட்ட பயணிகள் இறுதியில் வேறுவழியின்றி குமரன் நகர் காவல் நிலையத்திற்கு வண்டியை விடுமாறு நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் கூறினர்.

அதன்படியே வண்டியும் காவல் நிலையத்திற்கு செல்ல வீடியோ அடிப்படையில் விசாரணை நடந்தது. இளம்பெண்ணின் இந்த வீடியோவை பார்க்கும் பலரும் போதையால் இளையதலைமுறையே கெட்டு கீழ்வழியில் செல்கிறதே என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved