Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாகனச் சோதனையின்போது ஆட்டோ ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் (SI) தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (36). ஆட்டோ ஓட்டுநரான இவர், இன்று மாலை தனது கிராமத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மானாமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆட்டோ முத்தனேந்தல் பகுதிக்கு வந்தபோது, அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
அப்போது ஆட்டோவில் இருந்த பயணி ஒருவருக்குப் பேருந்து பிடிக்கும் அவசரம் இருந்ததால், "பயணியை இறக்கிவிட்டு உடனடியாகத் திரும்பி வருகிறேன்" எனக் கூறிவிட்டு லட்சுமணன் ஆட்டோவை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மானாமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கமணி, ஆட்டோவை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று மறித்துள்ளார்.
தொடர்ந்து ஓட்டுநர் லட்சுமணனை சட்டையைப் பிடித்து சாலையில் இழுத்துச் சென்றதுடன், அவரது காதுப் பகுதியில் மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் லட்சுமணனின் காதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் காதில் தீவிர காயம் இருந்த காரணத்தால், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மானாமதுரை காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே போலீசார் நடத்திய விசாரணையின்போது அஜித்குமார், ஆகாஷ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அந்த வடு மறைவதற்குள், தற்போது பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் மீது உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்தியுள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை பகுதியில் காவல்துறையினரின் இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகக் குற்றம்சாட்டும் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர், தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved