Also Watch
Read this
திருநெல்வேலி மாவட்டம், மணிபுரத்தில் கோவில் அருகே உள்ள காலி இடத்தை பார்க்கிங்காக பயன்படுத்துவது தொடர்பான தகராறில் அண்ணன், தம்பி இருவர் நடுரோட்டில் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் நடுநடுங்க வைத்த நிலையில், கொ* செய்ததாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியும் கைதாகியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்லமாடன் சாமி கோவில்
நெல்லை டவுன் அருகே மணிபுரம் கிராமத்தில் உள்ளது நல்லமாடன்சாமி கோவில். அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான செந்தில் என்பவர் இந்த கோவிலை நிர்வகித்து வந்துள்ளார். பரம்பரை பரம்பரையாக நல்லமாடன் சாமி கோவிலை செந்திலின் குடும்பத்தினர் தான் நிர்வகித்து வந்துள்ளனர். பொது இடத்தில் கோவில் இருக்கும் நிலையில், அதை சுற்றியுள்ள காலி நிலங்களை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பார்க்கிங் இடமாக...
கோவிலை தாண்டி பத்து வீடுகள் தள்ளி டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகிய சகோதரர்கள் இருவர் வசித்து வந்தனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்தவர்கள் வயதுமுதிர்வு காரணமாக ஊருக்கே திரும்பி வந்து செட்டில் ஆன நிலையில், நல்லமாடன் சாமி கோவில் பின்புறம் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தில் பெரிய ஷெட் அமைத்து நாய் வளர்த்து வந்துள்ளனர்.

அதுபோக கோவிலை ஒட்டிய காலி இடத்தை டால்டன் நிக்கோலஸ் சகோதரர்கள் தங்கள் கார்களை நிறுத்தும் பார்க்கிங்காக மாற்றியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில், அடிக்கடி டால்டன் நிக்கோலஸ் சகோதரர்களிடம் தகராறில் ஈடுபட்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

கோபத்தில் கத்தி உடன்...
இந்நிலையில் தான், செவ்வாய்க்கிழமையன்று வழிபாட்டிற்காக குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்த செந்தில், தனது புல்லட்டை நிறுத்த இடமின்றி தடுமாறியிருக்கிறார். அப்போது, கோவிலை ஒட்டி டால்டன் மற்றும் நிக்கோலசின் கார் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்தவர், மனைவியுடன் சென்று இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இருதரப்பும் கடுமையான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென விறுவிறுவென வீட்டிற்கு சென்ற செந்தில் கையில் கத்தியை கொண்டுவந்து அண்ணன் தம்பிகளான டால்டன் மற்றும் நிக்கோலசை தாக்கியிருக்கிறார். இதை தடுக்கவேண்டிய செந்தில் மனைவி ரஞ்சிதாவோ அதை தடுக்காமல் செந்திலை தூண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு பதறியடித்து ஓடிவந்த டால்டனின் மகன் நரேந்திரன், செந்திலின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி பதிலுக்கு குத்தியதாக தெரிகிறது.

மனைவியும் கைது
ரத்த வெள்ளத்தில் சரிந்த அண்ணன் தம்பி இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்ததை அடுத்து, போலீசார் செந்திலையும் நரேந்திரனையும் முதற்கட்டமாக கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் கொ*க்கு செந்திலின் மனைவி ரஞ்சிதாவும் உறுதுணையாக செயல்பட்டது தெரியவர, அவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved