உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்
கொல்கத்தாவில் துர்கா பூஜை விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
துர்கா பூஜை விழாவின்போது கூட்ட நெரிசல்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
துர்கா பூஜையைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்த நிலையில், கனமழை பெய்ததால் மக்கள் மழையிலிருந்து ஒதுங்க ஒரே நேரத்தில் முன்னேறியதாகக் கூறப்படுகிறது. அப்போது குறுகலான நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, சிலர் கீழே விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்
கொல்கத்தா கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, வெளிப்படையான முறையில் முறையான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பூஜைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.