news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மக்காவை நெருங்கிய தாக்குதல், ஈரான் போரின் எதிர்பாராத ஆபத்து
tv

Also Watch

மக்காவை நெருங்கிய தாக்குதல், ஈரான் போரின் எதிர்பாராத ஆபத்து

உலக எண்ணெய் சந்தையில்...

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் ஈரான் போர், தற்போது எண்ணெய் சந்தையையும் கடந்து, இஸ்லாமிய உலகின் புனித நகரமான மக்காவின் பாதுகாப்பு வரை சென்றுள்ளது.

டிரோன் அழிப்பு, அதிர்ச்சி
செப்டம்பர் 15ஆம் தேதி அன்று மக்காவுக்கு தெற்கே வந்த ஹவுதி ட்ரோன் ஒன்றை சவுதி அரேபிய வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது. ஆனால், மக்காவை குறிவைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் ஆதரவு ஹவுதிகள் மறுத்துள்ளன.

இந்தச் சம்பவத்தை ஒரு தனிப்பட்ட ட்ரோன் தாக்குதல் என்ற அளவில் மட்டும் பார்க்க முடியாது. மக்கா, சவுதி அரேபியாவின் பாதுகாப்பு, செங்கடல்–பாப் அல்-மண்டாப் கடல்வழி, ஹோர்முஸ் நீரிணை, சவுதி எண்ணெய் குழாய்கள் என பல முனைகள் ஒரே நேரத்தில் பதற்றத்தில் சிக்கியுள்ளன. இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது.

சவுதி அரேபியா ஏன் நேரடியாக இழுக்கப்படுகிறது?
மக்கா என்பது சவுதி அரேபியாவின் முக்கிய நகரம் மட்டுமல்ல. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் புனித தலமாகவும், ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரையின் மையமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், மக்காவுக்குள் நுழைவதற்கு முன்பாக தெற்குப் பகுதியில் ஒரு ஹவுதி ட்ரோன் அழிக்கப்பட்டதாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மக்காவைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஹவுதி தரப்பு நிராகரித்து உள்ளது. எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடந்தால் அது பொருளாதாரப் பிரச்சினையாகக் கருதப்படலாம். ஆனால், மக்கா அருகே தாக்குதல் நடந்ததாக சவுதி கூறுவது மதம், பாதுகாப்பு மற்றும் மேற்காசிய அரசியல் ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது.

உலக எண்ணெய் சந்தையில்...
தற்போதைய போர், ஈரான் மற்றும் அதன் எதிரிகளுக்கு இடையிலான நேரடி மோதலைத் தாண்டி, ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்கள் செயல்படும் பல பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. ஏமனில் உள்ள ஹவுதிகளின் நடவடிக்கைகள் செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டாப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி சவுதி அரேபியாவின் முக்கியமான East-West எண்ணெய் குழாய் மீது ட்ரோன் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தக் குழாய் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தக் குழாய் சுமார் 1,200 கிலோமீட்டர் நீளமானது. சவுதியின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரையில் உள்ள யான்பு துறைமுகம் வரை எண்ணெயை எடுத்துச் செல்லும் முக்கிய பாதையாக இது உள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்ட தடைகளுக்கு மாற்றுப் பாதையாகவே இந்தக் குழாய் முக்கிய பங்கு வகித்து வந்தது. அந்த மாற்றுப் பாதையும் பாதிக்கப்பட்டால், உலக எண்ணெய் சந்தையில் எண்ணெய் விநியோம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஹோர்முஸ் + பாப் அல்-மண்டாப்: இரட்டை அழுத்தம்
உலக எண்ணெய் வர்த்தகத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கியமானது. ஈரான் போர் காரணமாக, இங்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது மற்றொரு முக்கியமான கடல்வழியான பாப் அல்-மண்டாப் பகுதியிலும் ஹவுதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. ஹோர்முஸ் என்பது பாரசீக வளைகுடாவில் இருந்து உலக சந்தைக்கு செல்லும் முக்கிய பாதை. பாப் அல்-மண்டாப் என்பது செங்கடல் வழியாக ஐரோப்பா உள்ளிட்ட சந்தைகளை இணைக்கும் முக்கிய கடல்வழி. இதனால் எண்ணெய் வர்த்தகத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு புவியியல் பகுதிகளில் அபாயம் உருவாகிறது. இந்த இரு பாதைகளும் நீண்ட காலம் பாதிக்கப்பட்டால், கப்பல்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருக்கும். இதனால் பயண நேரம், காப்பீட்டுச் செலவு, எரிபொருள் செலவு ஆகியவை அதிகரிக்கலாம்.

முடிவுக்கு வராத போர்
கச்சா எண்ணெய் விலை என்பது உற்பத்தி அளவால் மட்டும் தீர்மானிக்கப்படுவது இல்லை. எதிர்காலத்தில் எண்ணெய் விநியோகம் குறையக்கூடும் என்ற அச்சமே விலையை உயர்த்துவதற்குப் போதுமானது. செப்டம்பர் 16ஆம் தேதி Brent கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 108 டாலராகவும் WTI கச்சா எண்ணெய் 106 டாலராகவும் இருந்தது. போர் நீடித்தால் எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும் பகுதியை இறக்குமதி செய்கிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். போக்குவரத்து செலவு அதிகரிக்கும். விமான எரிபொருள் செலவு அதிகரிக்கும். சரக்கு போக்குவரத்து செலவு உயரும்.

தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். பிளாஸ்டிக் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரும். பணவீக்க அழுத்தம் உருவாகும். இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்கும். ரூபாயின் மீது அழுத்தம் ஏற்படும். அதாவது மத்திய கிழக்கில் நடைபெறும் போர், இந்திய குடும்பத்தின் மாதச் செலவு வரை பதம் பார்க்கத் தொடங்கி உள்ளது.

Related Link
யு.பி.ஐ கட்டணங்களால் யாருக்கு பாதிப்பு?

யு.பி.ஐ கட்டணங்களால் யாருக்கு பாதிப்பு?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"நான் யாருக்கும் பாஸ் கொடுக்கவில்லை" என நிர்மல்குமார் திட்டவட்டம்

18
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved