Also Watch
Read this
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.2 ஆயிரம் வரையிலான வர்த்தகத்துக்கு கட்டணம் பெறப்படாது எனவும், ரூ.75 ஆயிரத்துக்கும் மேல் ரூ.300 வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படும் நடைமுறை அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் பின்னணி என்ன? பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து மத்திய அரசு கட்டணம் விதிக்கிறதா?

தனிநபர் பரிவர்த்தனைக்கு கட்டணமில்லை
கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி யு.பி.ஐ. Unified Payments Interface அறிமுகப்படுத்தப் பட்டது. 2017ஆம் நிதியாண்டில் வெறும் 7 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.314 லட்சம் கோடியாக உயர்ந்தது. 10 ஆண்டுகளில் இந்தியாவின் யு.பி.ஐ. முறை உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையாக வளர்ந்து உள்ளது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், பூடான், கத்தார், இலங்கை, கம்போடியா, கிரீஸ், உஸ்பெகிஸ்தான் என மொத்தம் 11 நாடுகளில் யு.பி.ஐ. சேவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணங்களை மாற்றியமைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. இந்த நிலையில் யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் அதாவது 2 ஆயிரம் ரூபாய்க்கு 8 ரூபாய் கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளது. ரூ.75 ஆயிரமும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு இந்த கட்டணம் அதிகபட்சமாக 300 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சிறுவணிகர்களுக்கு எதில் விலக்கு?
ரயில் டிக்கெட் பதிவு, செல்போன் ரீசார்ஜ், பெட்ரோல், எரிவாயு போன்ற அத்தியாவசிய துறைகளில் பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. யு.பி.ஐ. கியூஆர் குறியீடுகள் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிற சிறு வணிகர்களுக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 96 சதவீத வணிக பரிவர்த்தனைகள் புதிய கட்டணத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

தனிநபர்களுக்கு...
வணிக ரீதியில் இல்லாமல் தனிநபர்கள் இடையே மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. அதாவது யு.பி.ஐ. மூலம் பணம் அனுப்புவதற்கோ அல்லது பெறுவதற்கோ தனிநபர்கள் மீது எந்த பரிவர்த்தனைக் கட்டணமோ, அல்லது பிற கட்டணமோ விதிக்கப்படாது. யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் 37 சதவீத அளவும், 70 சதவீத மதிப்பும் கொண்ட இந்த பரிமாற்றங்கள் கட்டணமின்றி தொடரும். செயலி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் MDR கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடாது என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு ரூ.22,000 கோடி வருவாய்
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் என்ற அளவில் வர்த்தக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 2028ஆம் நிதியாண்டுக்குள் ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடியும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த வருவாயில் வங்கிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடியும், பணப் பரிவர்த்தனை செயலிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடியும், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடியும் கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அழுத்தமா?
MDR எனப்படும் வர்த்தக தள்ளுபடி விகிதம் பூஜ்யமாக இருக்கும் கொள்கைக்கு அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது, மோடி அரசு அந்த கொள்கையை மாற்றி, யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்க பாதையை திறந்து விட்டுள்ளது. இனிமேல், ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்த்தக யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு எம்.டி.ஆர். விதிக்க முடியும். அந்த பரிமாற்றங்கள், மொத்த அளவில் 5 சதவீதமாக இருந்தாலும், மொத்த பரிமாற்ற மதிப்பில் 65 சதவீதமாக இருக்கும்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
வாடிக்கையாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கடைக்காரர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் எங்கிருந்து வரும்? விலை உயர்த்தப்பட்டு, இறுதியில் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டில் இருந்து நேரடியாகப் பெறப்படும். அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமர் மீண்டும் பணிந்து விட்டார். அமெரிக்க கம்பெனிகளுக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை திறந்து விடத்தான் இவையெல்லாம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போதுள்ள உச்சவரம்பு நாளை மாற்றப்படலாம். தனிநபர்களுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கும் கட்டணம் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்க்கட்சிகளின் அச்சத்தை நாம் எளிதில் புறந்தள்ளி விட முடியாது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved