Also Watch
Read this
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 47ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு அறிவித்து உள்ளது.

கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், சூர்யா-47 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில், வெங்கட் அட்லுரி இயக்கிய விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

சோகத்தில் மூழ்கிய இந்திய ரசிகர்கள்
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள The Odyssey திரைப்படத்தை அசல் IMAX 70mm Film Format-ல் பார்க்க முடியவில்லை என்று இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

உலகம் முழுவதும் வெறும் 41 திரையரங்குகளில் மட்டுமே IMAX 70mm ஃபிலிம் ப்ரொஜெக்டர் வசதி இருக்கும் நிலையில், இந்தியாவில் அந்த வசதி இல்லாததால், இந்தியாவில் உள்ள அனைத்து IMAX திரையரங்குகளிலும் The Odyssey திரைப்படம் டிஜிட்டல் IMAX வடிவில் மட்டுமே திரையிடப்பட்டு உள்ளது. இதனால், படத்தின் அசல் திரையரங்கு அனுபவத்தை இந்திய ரசிகர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Fauzi இந்த தேதியில் தான் வெளியாகிறது
ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ், இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானுச்சந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபௌசி Fauzi திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இளம் நடிகருக்கு குவியும் பட வாய்ப்பு
'யூத்' திரைப்பட வெற்றிக்குப் பிறகு, இளம் நடிகர் கென் கருணாஸுக்கு முன்னணி இயக்குநர்களிடமிருந்து பல பட வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவற்றில் எதையும் ஏற்காமல், தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ராஜன் வகையறா' படத்தில் மட்டும் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இளம் வயது ராஜன் கதாபாத்திரத்தில் கென் கருணாஸ் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கென் கருணாஸ் தனது அடுத்த படத்தை தானே இயக்கி, கதை எழுதி, கதாநாயகனாகவும் நடிக்கத் திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கல்லூரி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு 'யூத் 2' என்ற தலைப்பு வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், இப்படத்தை அவரது தந்தை நடிகர் கருணாஸ் தயாரிப்பதாவும், தகவல் வெளியாகி உள்ளது.

ரிலீஸ் தேதியை மாற்றிய DC படக்குழு
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடித்துள்ள DC படம் ஜுலை 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், தற்போது ஆகஸ்ட் 7ஆம் தேதி தான் DC படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. காரணம், ஜனநாயகன் ஜூலை 23ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதால், இந்த படம் தள்ளிப் போகிறது என, தகவல் பரவி வருகிறது. ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும், வன்முறைகளும் நிறைந்துள்ள DC படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. அதே மாதிரி, இந்த படத்தில் பிரம்மாண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

முன்பதிவில் மாஸ் காட்டும் ஜனநாயகன்
தமிழக முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜூலை 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி உள்ளது.

இதுவரைக்கும் நடந்த முன்பதிவில் மட்டும் 4.8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஜனநாயகன், முன்பதிவில் மாஸ் காட்டுவதாக, சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.