Also Watch
Read this
அமெரிக்க அதிபர் மேன்மேலும் செல்வந்தராகிக் கொண்டிருக்கிறார், அவரது செல்வம் உப்பிப் பெருத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க வாக்காளர்கள் டிரம்பின் பொருளாதார “பொற்காலத்தை” உணரத் தொடங்கி உள்ளனர். காரணம் அதிபரின் சொத்துக் கணக்கும் வருவாய்ப் பெருக்கமும் அதை உணர்த்துகிறது. டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து அவரது சொத்து பன்மடங்கு பெருகியுள்ளது. டிரம்பின் தொழில் சாம்ராஜ்யமும் அமெரிக்கா எனும் பேரரசின் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள அதிர்ச்சிப் பின்னணி என்ன?
டிரம்ப்-க்கு சொந்தமான...
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மார்-அ-லாகோ (Mar-a-Lago) நேஷனல் டோரா (National Doral) ஆகிய இரண்டும் புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகள். சர்வதேச தரத்திலான கோல்ஃப் மைதானம் உள்ளிட்ட உயர்தர வசதிகள் இங்கு உண்டு. ஒரு உணவு பிளேட்டுக்கு மில்லியன் டாலர் என பில்போடும் இந்த விடுதிகளில் நிதி திரட்டும் இரவு விருந்துகளை நடத்தியது, வெளிநாட்டுப் பிரமுகர்களைக் கௌரவித்தது மற்றும் குடியரசுக் கட்சியின் கொண்டாட்டங்களை வரவேற்றது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. தொழில்துறைத் தலைவர்களும் அரசியல் குழுக்களும் தங்களது நிகழ்வுகளை இங்கே ஏற்பாடு செய்யப் போட்டி போட்டுள்ளனர். காரணம் மார்-அ-லாகோ, நேஷனல் டோரா இரண்டும் அதிபர் டிரம்புக்கு சொந்தமானவை.

ஒரு மில்லியன் டாலராக...
அதிபராக பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன், மார்-அ-லாகோ கிளப் உறுப்பினர் சேர்க்கை கட்டணத்தை 1 மில்லியன் டாலராக உயர்த்தினார் டிரம்ப். காரணம், இந்த கிளப்பிற்கு அடிக்கடி செல்லும் டிரம்ப், இரவில் கிளப்பின் உள்முற்றத்தில் உணவருந்துார். எனவே, அப்பாயின்ட்மென்ட் வாங்காமலே அதிபருடன் உரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கும் ஆடம்பரமான உல்லாச விடுதியாக இது உள்ளது. லாபி செய்யும் குழுக்கள் டிரம்புடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு அப்பட்டமான வாய்ப்பாகவும் அமைந்து விடுகிறது. மார்-அ-லாகோ கிளப்பில், டிரம்ப் அல்லது அவரது நிர்வாகத்துடன் வணிகத் தொடர்புகளை நாடும் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி திரட்டும் வியூகம்
"உள்ளே நுழைய செலுத்தும் கட்டணத்தை விட, அதிபரின் காதில் ஓதும் ஒரு கிசுகிசுப்புக்கு மிக அதிக மதிப்பு உண்டு" என்று, காரியம் சாதித்துக் கொள்பவர்கள் சத்தமாகவே சொல்கின்றனர். டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்பின் பல சொத்துக்கள் குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்வுகளுக்கான இடங்களாகவும் மாறியுள்ளன. பெரும்பாலும் டிரம்ப் வருவதற்கான சாத்தியக்கூறு என்ற கவர்ச்சி அறிவிப்புடன் நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பன்மடங்கு பெருகிய செல்வம்
டிரம்பே கூட, மார்-அ-லாகோவில் சர்வதேச தலைவர்களையும் பிற முக்கிய அரசியல்வாதிகளையும் இரவு விருந்துகளுக்கு உபசரித்துள்ளார். டிசம்பரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடனான சந்திப்புகளும் இதில் அடங்கும். அரசியலும் லாபமும் சங்கமிப்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். அமெரிக்காவின் மற்ற எந்த அதிபரையும் போல் அல்லாமல், ட்ரம்பின் தனிப்பட்ட செல்வம் அவரது பதவிக்காலத்தில் பன்மடங்கு பெருகியுள்ளது என்று Office of Government Ethics அரசாங்க நெறிமுறைகள் அலுவலகம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கை காட்டியது.
கொட்டும் வருமானம்...
டிரம்ப் தனது புளோரிடா சொத்துக்களிலிருந்து பெறும் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. மார்-அ-லாகோவிலிருந்து கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார். இது முந்தைய ஆண்டில் அவர் ஈட்டிய வருவாயை விட 50% அதிகமாகவும், 2020ல் அந்த ரிசார்ட்டிலிருந்து அவர் ஈட்டிய வருவாயை விட மூன்று மடங்காகவும் உள்ளது. இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் ஹோட்டல்கள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் பிற ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு டிரம்ப் பெயரைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய வெளிநாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் செய்துகொண்ட உரிம ஒப்பந்தங்கள் மூலம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோ வருமானம்...
தனக்குக் கிடைத்த பெரும் வருமானத்திற்கு, உயர்ந்து வந்த பங்குச் சந்தையும் ஒரு காரணம் என்றும், அது மற்ற பலருக்கும் நன்மை பயக்கும் என்றும் குறிப்பிட்டார். "நான் ஏன் லாபம் ஈட்டுகிறேன் தெரியுமா? ஏனென்றால் பங்குச் சந்தை உயர்ந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் லாபம் ஈட்டுகிறார்கள்," என்று டிரம்ப் கூறினார்.
அதிபரின் இலாபகரமான புதிய கிரிப்டோகரன்சி தொழில் $TRUMP மீம்காயின் மற்றும் வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் World Liberty Financial நிறுவனம் உள்ளிட்டவை மூலம் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. மொத்தத்தில், டிரம்ப் கடந்த ஆண்டு தனது கோல்ஃப் கிளப்புகள், ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் அடங்கிய சாம்ராஜ்யத்திலிருந்து ஈட்டிய வருமானத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக கிரிப்டோ வருமானமாக ஈட்டியுள்ளார்.

கணிசமான வருமானம்
கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி கையிருப்பு, royalty payments மற்றும் சொத்து முதலீடுகள் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை டிரம்ப் ஈட்டியுள்ளார். மேலும், டிரம்ப் முத்திரையிடப்பட்ட பைபிள்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் காலணிகளை விற்பனை செய்து கணிசமான லாபம் ஈட்டியுள்ளார். டிரம்புக்கு முன்பிருந்த அதிபர்கள் அனைவரும், பதவியில் இருக்கும்போது personal financial arrangements தனிப்பட்ட நிதி ஏற்பாடுகளிலிருந்து பகிரங்கமாக தங்களை முழுமையாகத் துண்டித்துக் கொண்டனர். ஆனால்,அதிபர் டிரம்போ புதிய நிதி ஆதாரங்களை உருவாக்கியுள்ளார். தனது சொந்த கிரிப்டோகரன்சி டோக்கன்களை டிரம்ப் வெளியிட்டது ஒரு உதாரணம்.
அரசியல் பின்விளைவுகள்
டிரம்ப் நிர்வாகம், வளர்ந்து வரும் கிரிப்டோ துறையைத் தனது பொருளாதார கொள்கையின் நடுநாயகமாக வைத்துள்ளது. டிரம்ப் நிர்வாகமே கிரிப்டோ துறையை ஒழுங்குபடுத்தும் நிலையில், பங்குச்சந்தை ஆணையத்தின் கண்காணிப்பில் இருந்து அதற்கு தளர்வுகள் வழங்கப்படுவதாக பல வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள நெறிமுறைச் சட்டங்களின் (ethics laws) கீழ் அந்நாட்டு அதிபர்களும் துணை அதிபர்களும் வரமாட்டார்கள். இருப்பினும் அரசியல் பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்காக நெறிமுறைச் சட்டங்களை அதிபர்கள் அனுசரித்து நடந்துகொள்வது வழக்கம்.

எவ்வித கவலையும் இன்றி...
ஆனால், 2016 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது வரிக் கணக்கு விவரங்களை வெளியிட மறுத்த டிரம்ப் அந்த மரபை மீறினார். டிரம்பின் பெருகிவரும் செல்வம் குறித்த விவரங்கள், mandatory financial declarations வெளியீட்டில் இடம்பெற்றிருந்தன. "நாம் அனைவரும் லாபம் அடைகிறோம். என்னிடம் நிறைய பணம் இருப்பதால் நான் அதிக லாபம் அடைகிறேன்," என்பதுதான் டிரம்ப் கூறும் பதில். சராசரி அமெரிக்கர்களின் நிலை குறித்து எவ்விதக் கவலையும் இன்றி அதிபர் பேசுகிறார் என்பதுதான் சாரம்.
தவறாக பயன்படுத்துகிறார்...
தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவார் என்று நம்பிய அமெரிக்க வாக்காளர்கள் டிரம்பை அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், அந்த பதவியை அருவருப்பான முறையில் அவர் தவறாகப் பயன்படுத்துவதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். அதிலும் டிரம்பின் பெரும் லாபம் ஈட்டும் கிரிப்டோகரன்சி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாடுகள் அதிபர்களுக்கு அனுப்பும் பரிசுகளைக் கடுமையான விதிகள் கட்டுப்படுத்துகின்றன. மேலும், டிரம்ப் குடும்பத்திற்கு விரிவான வர்த்தக தொடர்புகள் உள்ள மத்திய கிழக்கு மண்டலத்தில், கத்தார் அமெரிக்கக் கொள்கையின் ஒரு முக்கியத் தூணாக விளங்குகிறது. எனவே கத்தார் நாடு அதிபர் டிரம்புக்கு விமானம் பரிசளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற இடைத்தேர்தலில்...
இதுபோன்ற ஒரு சிக்கலை டிரம்புக்கு கிரிப்டோ விவகாரமும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் ரீதியாக டிரம்ப் விலை கொடுக்க நேரிடுமா? நவம்பரில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், கிரிப்டோ மற்றும் கத்தார் பரிசளித்த விமான விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர், பிரதிநிதிகள் சபையை மீண்டும் கைப்பற்றினால், விசாரணைக்கான சாத்தியங்கள் உள்ளன.
நெருக்கடியில் அமெரிக்கர்கள்
டிரம்ப் பெரும் பணக்காரர் என்பது ஒன்றும் ரகசியமல்ல. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், அவரது செல்வமும், கடுமையாக உழைக்கும் தொழிலதிபர் என்ற அவரது புகழும் அவருக்கு ஒரு அரசியல் சாதகமாகவே இருந்துள்ளன. பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான ஒரு தகுதியாக அவரது வெற்றி அடிக்கடி சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால், இடைக்காலத் தேர்தல்களின் முடிவைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய பிரச்சனை, வாழ்க்கை செலவுகள் கட்டுபடியாகவில்லை என்ற நெருக்கடிதான். இந்த நெருக்கடியில் லட்சக் கணக்கான அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர்.

கருத்துக் கணிப்புகளில்...
டிரம்ப் குறைப்பதாக உறுதியளித்த விலைவாசிகள், இன்னும் பல நுகர்வோரை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. "நாம் அனைவரும் லாபம் ஈட்டுகிறோம்" என்று உயர்ந்து வரும் பங்குச் சந்தைகளைக் அவர் குறிப்பிட்டபோதிலும், அது மளிகைப் பொருட்களை வாங்குவதை எளிதாக்கிவிடாது. பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மீது நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், விலைகளைக் குறைக்கத் தவறியதால் கோபமடைந்து உள்ளதாகவும், அவரது அணுகுமுறை தங்கள் வாழ்க்கையை மோசமாக்குவதாகக் கருதுவதாகவும் சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பொருளாதார ஏற்றத்தில் இருக்கிறார். அதிபர் மேன்மேலும் பணக்காரராகிறார் என்பது வாக்காளர்களுக்கு தெரிந்துவிட்டது.

அதிபர் பணக்காரர், வறுமையில் வாக்காளர்கள்...
ஆனால், அமெரிக்க வாக்காளர்களோ வறுமை என்ற எதிர்முனையை நோக்கி உந்தப்படுகிறார்கள். இதற்கு அரசியல் ரீதியான டிரம்ப் விலை கொடுக்க வேண்டுமா என்பது அடுத்த நான்கு மாதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தெரிந்துவிடும். பல நாடுகளில் காணப்படும் ஊழல், சலுகை பேரங்கள் மற்றும் அரசாங்கத் தலையீடுகள் போன்ற பொதுவான பண்புகளிலிருந்து பெரும்பாலும் விடுபட்டு, முதலீட்டிற்கான ஒரு பாதுகாப்பான புகலிடமாகத் திகழும் நற்பெயரே, அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிக வலிமையானதாக உருவெடுத்ததற்கு முக்கிய காரணமாகும். ஆனால், அது பழங்கதை என்பதே நிதர்சனமான உண்மை.