கேரளாவில், பிரபல நடிகை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக இருந்த 28 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியதே திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படும் நிலையில் வழக்கில் இருந்து திலீப் விடுதலையானது எப்படி? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.தென்னிந்திய திரையுலகின் பிரபல இளம் நடிகை கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி, தான் நடித்த படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு ஆடி காரில் சென்று கொண்டிருந்தார். அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில் வந்தபோது பின்னால் வேனில் வந்த ஒரு கும்பல், நடிகை வந்த கார் மீது மோதியது. இதையடுத்து, கார் நின்றதும் அந்த வேனில் இருந்து இறங்கிய கும்பல் நடிகையை அவரது காரில் வைத்தே கடத்தி சென்றது. மேலும், காரில் இருந்துகொண்டே 2 மணி நேரத்திற்கும் மேல் அந்த கும்பல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனை தங்கள் கேமராவில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டது. அதன் பின்னர், பழவிராட்டம் பகுதியில் காரை நிறுத்தி அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய கேரள காவல்துறையினர், நடிகையின் டிரைவர் மார்டின் என்பவரை கைது செய்தனர்.தொடர்ந்து, மார்டினின் செல்போனை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடப்பதற்கு முன்பு பல்சர் சுனி என்பவரிடம் இருந்து மார்டின் செல்போனுக்கு 40 அழைப்புகள் மற்றும் நிறைய மெசேஜ் வந்திருந்தது தெரியவந்தது.பெரும்பாவூர் அருகே கூவப்பட்டியை சேர்ந்த பல்சர் சுனி ஏற்கனவே நடிகையிடம் டிரைவராக பணியாற்றியதோடு மட்டுமில்லாமல் மார்டினை வேலைக்கு சேர்த்துவிட்டதும் அவர்தான். அதனால் அவரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவல் மூலம் மணிகண்டன், விஜீஸ், சலீம், பிரதீப் உள்ளிட்டோரையும் கைது செய்தனர். இதனிடையே நடிகையுடன் 12-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் திலீப்பின் பெயரும் பாலியல் சம்பவத்தில் தொடர்புள்ளதாக அடிபட்டது.துபாயில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் திலீப்பும் ஒரு நடிகையும் நெருங்கி பழகியதாகவும், அதனை திலீப்பின் முதல் மனைவியான மஞ்சுவாரியரிடம் பாதிக்கப்பட்ட நடிகை கூறியதாகவும், அதனாலேயே திலீப்பை மஞ்சு வாரியர் விவகாரத்து செய்ததாகவும் கூறப்பட்டது.அந்த திருமண விரிசலுக்கு காரணமாக இருந்த நடிகையை பழிவாங்கவே தீலீப் சதித்திட்டம் தீட்டி பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து திரைப்பட சங்க பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட திலீப்பை, சம்பவம் நடந்த அதே ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். 85 நாட்கள் சிறையில் கம்பி எண்ணிய திலீப் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.8ஆவது குற்றவாளியாக திலீப் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மொத்தம் 833 பேருடைய கைரேகைகள், தடயவியல் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டன. திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகையின் உறவினர்கள் என 261 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.இவர்களில் முதலில், நடிகைக்கு ஆதரவாக சாட்சி அளித்த 28 பேர், அதன்பின்பு பிறழ் சாட்சிகளாக மாறினர். மலையாளத் திரைப்பட இயக்குநர் பாலச்சந்திரகுமார் மிகவும் உடல்நலக்குறைவுடன் இருந்த நிலையிலும் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சி அளித்தது, இந்த வழக்கின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. எட்டு ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. ஏ ஒன் பல்சர் சுனி முதல் மார்டின், மணிகண்டன், விஜீஸ், சலீம் மற்றும் ஏ 6 பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள நீதிபதி, திலீப் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி அவரையும், அவரது நண்பர் சரத் ஆகியோரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகள் 6 பேருக்குமான தண்டனை விவரங்கள் டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.இந்த தீர்ப்பிற்கு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திலீப், மஞ்சு வாரியர் என் வாழ்க்கையை அழிக்க முயன்றவர் என குற்றம்சாட்டியதோடு, காவல்துறையினர் மீதும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். இந்த வழக்கின் பிரதான குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு காவல்துறையினர் ஒரு பொய்யான கதையை உருவாக்கி அதை ஊடகங்கள் மூலம் பரப்பினர். எனது திரைப்பட வாழ்க்கையையும் நற்பெயரையும் அழிக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்பட்ட பொய்க்கதை நீதிமன்றத்திலேயே தகர்ந்துவிட்டது எனக் கூறினார்.மேலும், தக்கசமயத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து திலீப் புறப்பட்டுச் சென்றார்..இதுஒருபுறமிருக்க, திலீப் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என நடிகை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.