அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீட்டிற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள சூழலில், திடீர் திருப்பமாக டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை என்.டி.ஏ. கூட்டணியில் இணைத்துக்கொள்ள இபிஎஸ் சம்மதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தனை நாள் பாஜகவிடம் மல்லுக்கட்டிய இபிஎஸ், முதல்முறையாக இறங்கி வந்ததற்கான காரணம் என்ன? அதற்காக அவர் விதித்த நிபந்தனைகள் என்ன என்பதனை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் பிரதான கட்சிகளான அதிமுக - பாஜக முந்தியது, அரசியல் களத்தில் சூடுபிடிக்க வைத்துள்ளது. ஆளுங்கட்சியான திமுகவே காங்கிரஸுடன் கள நிலவரம் குறித்தான ஆலோசனையை மட்டுமே நடத்தியிருக்க கூடிய நிலையில், தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை என்பது போல தான் தெரிகிறது. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வருகை தந்த தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், முதலில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைதொடர்ந்து, எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தினார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடனான கூட்டணியில், 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட பாஜக வரும் தேர்தலில் தொகுதி எண்ணிக்கையை இருமடங்கிற்கு மேல் உயர்த்தி 50 ஆக கேட்டதாக சொல்லப்படுகிறது. வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள தொகுதிகளை அடையாளம் கண்டுள்ள பாஜக மேலிடம், கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க பேரம் பேசியதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர பியூஷ் கோயல் வலியுறுத்திய நிலையில், இருவரையும் இணைக்க இபிஎஸ் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. பாமகவையும் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இழுக்க பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியை உருவாக்குவதன் மூலம் வன்னியர்கள், முக்குலத்தோரின் வாக்குகளை அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக, இணைப்புக்கு இடையூறாக இருந்த இபிஎஸ் சற்று மனமிறங்கி வந்திருந்தாலும், ஒபிஎஸ்சை கட்சியில் சேர்ப்பதற்கு ஒருபோதும் சம்மதிக்க முடியாது. வேண்டுமென்றால் கூட்டணியில் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம், அதுவும் இரட்டை இலை சின்னம் தரமுடியாது என்று கறாராக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இது தவிர, பாமகவில் தந்தை, மகன் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பையும் இபிஎஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல் கசிந்துள்ளது.இருகட்சியின் தலைவர்களும் தங்களது சாதகமான பாதகமான கருத்துகளை பரிமாறிக்கொண்ட நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மீண்டும் சென்னை வருவதாக பியூஷ் கோயல் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக 170 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், பாஜக கேட்ட தொகுதிகளில் பாதிக்கும் கீழ் குறைத்து 23 இடங்களை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும், அதேபோல் பாமகவுக்கும் 23 இடங்களை தரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிடிவி தினகரன், தேமுதிகவுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. தமாகா உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக கைகோர்த்தபோது, விரைவில் கூட்டணி அச்சு முறிந்துவிடும் என பிற கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில், இருகட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டன. பாஜக தமிழகத்தில் பெரிதளவில் காலூன்றவில்லை என்றபோது, அவர்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்துவிட்டு வெற்றி வாய்ப்பில் கோட்டை விட்டால் கோட்டையை பிடிக்கும் கனவு தவிடுபிடியாகும் என, அதிமுகவினர் யோசிப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.