Also Watch
Read this

வளைகுடா போரால், இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில், முதலீட்டாளர்களுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்செக்ஸ் சதவிகிதம் கடும் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தைகள், இன்று மார்ச் 19ஆம் தேதி காலை, கடும் வீழ்ச்சி உடன் தொடங்கி, வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் சரிந்து 74,750.92 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. 2.55 சதவீதம் வீழ்ச்சியை கண்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 550 புள்ளிகள் சரிந்து 23,197.75 புள்ளிகளாக வர்த்தகத்தை ஆரம்பித்தது. காலை 10.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 75,045.97 புள்ளிகளில் வர்த்தகமானது.

இந்த வாரத்தில்...
இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்கள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக மார்ச் 19ஆம் தேதி, சரிவை சந்தித்தது.

எரிபொருள் உற்பத்தி பாதிப்பு
வர்த்தக நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 11 சதவீதம் உயர்ந்து 119.5 டாலராக இருந்தது. கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 9 நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதலை நடத்தியதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி மேலும் பாதிக்கப்பட்டு உள்ளதால் விலை உயர்ந்து உள்ளது.

சுமாராக ரூ.13 லட்சம் கோடி...
இன்று மார்ச் 19ஆம் தேதி பிற்பகல் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 2,496.89 புள்ளி குறைந்து 74,207.24 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 775.65 புள்ளி குறைந்து 23,002.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. இன்றைய சரிவினால் முதலீட்டாளர்களுக்கு ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வர்த்தக நேரத்தின் இடையே மேலும் 49 காசுகள் சரிந்து 92.89 ஆக கடும் வீழ்ச்சி அடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved