Also Watch
Read this

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை லீக் போட்டியில், பிரேசில் அணி அதிரடி காட்டி உள்ளது. ஹைதி அணியை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதல் போட்டி டிரா...
மொராக்கோ அணிக்கு எதிரான முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது போட்டியில் ஹைதி அணியை 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையில், பிரேசில் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பிலடெல்பியா மைதானத்தில் நடைபெற்ற குரூப்-சி லீக் போட்டியில் ஹைதி அணியை 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

விமர்சனம் எழுந்த நிலையில்...
முதல் போட்டியில் மொராக்கோ அணி உடன் 1க்கு 1 என டிரா செய்ததால் விமர்சனங்களை சந்தித்த பிரேசில் அணி, இந்த போட்டியின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரேசில், தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி களத்தில் ஹைதி அணியை திணறடித்தது.

23, 36ஆவது நிமிடத்தில் இரட்டை கோல்
இந்த ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் மேற்கொண்ட கோல் முயற்சியை ஹைதி கோல்கீப்பர் ஜானி பிளாசிட் தடுத்தார். அதேநேரம், திரும்பி வந்த பந்தை மத்தேயுஸ் குன்ஹா கோலாக மாற்றி பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் உற்சாகமடைந்த பிரேசில் அணி தொடர்ந்து அதிரடியாக ஆடியது. 36ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் வழங்கிய துல்லியமான நகர்வை பயன்படுத்திய குன்ஹா, தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்து அணியின் முன்னிலையை 2க்கு பூஜ்ஜியம் என உயர்த்தினார்.

ஆட்ட நாயகன்
முதல் பாதி முடிவதற்கு முன்னரே கூடுதல் நேரத்தில், லூகாஸ் பகுவேட்டா வழங்கிய அருமையான நகர்வைப் பெற்ற வினிசியஸ் ஜூனியர், கோல் கீப்பரை எளிதாக ஏமாற்றி, 3ஆவது கோலை அடித்தார். இந்த போட்டியில் பிரேசில் அடித்த 3 கோல்களிலும் நேரடியாக பங்களித்த வினிசியஸ் ஜூனியர், ஆட்ட நாயகன் விருதுக்கான முக்கிய போட்டியாளராக திகழ்ந்தார்.

உலகக் கோப்பை கனவு தகர்ந்தது
முதல் போட்டியிலும் தோல்வி கண்டிருந்த ஹைதி அணி, இந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்ததால், உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
புள்ளிப்பட்டியல்...
இந்த வெற்றியின் மூலம் பிரேசில், மொராக்கோ அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஸ்காட்லாந்து 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹைதி புள்ளிகள் எதுவுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.

வெற்றியிலும் பிரேசிலுக்கு அதிர்ச்சி
அபார வெற்றியை ருசித்தாலும், பிரேசில் அணிக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வு அரங்கேறியது. நட்சத்திர வீரர் ரஃபின்யா முதல் பாதியிலேயே தொடைப் பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக வெளியேறினார். அவரது காயம் தீவிரமானதா? என்பது குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். ஸ்காட்லாந்துக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்பு ரஃபின்யாவின் உடல்நிலை பிரேசில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved