Also Watch
Read this

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டம், டிராவில் முடிந்தது.

ஈரான், நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின், பரபரப்பான 6ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் எலிஜா ஜஸ்ட் (Elijah Just), முதல் கோலை அடித்த நிலையில், 31ஆவது நிமிடத்தில் ஈரான் வீரர் ரமின் ரெசெயியன்(Ramin Rezaeian) முதல் கோலை பதிவு செய்தார்.

2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிரா
பின்னர், ஆட்டம் தீவிரமான நிலையில், 54ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் எலிஜா ஜஸ்ட் மீண்டும் ஒரு கோலை அடித்து தனது 2ஆவது கோலாக உயர்த்தினார். இதனை தொடர்ந்து, 63ஆவது நிமிடத்தில் ஈரான் அணியின் முகமது மொகபி (Mohammad Mohebi) தனது அணிக்காக 2ஆவது கோலை அடித்த நிலையில் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.

ஆட்டம் எப்படி?
போட்டியின் தொடக்கத்தில், ஈரான் ஆதிக்கம் செலுத்தினாலும், ஏழாவது நிமிடத்தில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது. கிறிஸ் உட் பந்தை சிறப்பாக கட்டுப்படுத்தி, எலிஜா ஜஸ்ட் உடன் இணைந்து வியூகம் அமைத்தார். இதனை எலிஜா ஜஸ்ட், வாலி ஷாட் ஆக மாற்றி கோல் வலைக்குள் செலுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற ஈரான் கேப்டன் மெஹதி தரேமி மைதானத்தின் நடுப் பகுதியில் இருந்து நியூஸிலாந்து வீரர்களுக்குப் போக்கு காட்டி, நீண்ட தூரம் பந்தை எடுத்துச் சென்று அடித்த ஷாட் கோல்போஸ்ட்டின் வலது கம்பத்தில் பட்டு வெளியேறியது. இருப்பினும் 32ஆவது நிமிடத்தில் ஈரான் சமநிலையை எட்டியது.

2க்கு 2 என்ற சமநிலை
இரண்டாவது பாதியின் 55ஆவது நிமிடத்தில் மீண்டும் நியூசிலாந்து, அழகான அணிசார் நகர்வின் முடிவில், எலிஜா ஜஸ்ட் மின்னல் வேகத்தில் பந்தை ஈரான் வீரர்களுக்குப் போக்கு காட்டி எடுத்துச் சென்று, பிறகு மீண்டும் பின்பக்கமாக மற்றொரு வீரருக்கு பந்தை அனுப்ப, அவர் மீண்டும் எலிஜா ஜஸ்டிற்கு கொடுக்க, அவர் அதைச் சிறப்பாக இரண்டாவது கோலாக மாற்ற, நியூசிலாந்து 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், மீண்டும் ஈரான் போராடியது. ரெசாயியன் வலது பக்கத்தில் இருந்து அனுப்பிய துல்லியமான கிராஸை, முகமது மொகேபி தலையால் முட்டி கோலாக மாற்றினார். பந்து கம்பத்தில் பட்டாலும், அதிர்ஷ்டவசமாக வலைக்குள் சென்றதால் ஈரான் மீண்டும் 2க்கு 2 என்ற சமநிலையை எட்டியது.

தலா ஒரு புள்ளி
போட்டியின் இறுதிக்கட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றிக்கான கோலை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அவற்றை பயன்படுத்த முடியவில்லை. இறுதியில், கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஈரானும் நியூசிலாந்து அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

போர்க் களத்தில் இருந்து போட்டி களத்தில்...
போட்டி தொடங்குவதற்கு முன்பாக 1979 இஸ்லாமிய புரட்சிக்கு முந்தைய ஈரானின் அடையாளமான “லயன் அண்ட் சன்” கொடிகள் ரசிகர்களிடையே காணப்பட்டன. அவற்றைத் தடுக்க கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா முயற்சித்தாலும், விளையாட்டு அரங்கில் கொடிகள் காணப்பட்டன. மைதானத்தில் கூடியிருந்த பெரும்பாலான ரசிகர்கள், ஈரான் அணிக்கு உற்சாக ஆதரவை வழங்கினர்.

முதல் போட்டியில்...
2026 ஃபிபா உலகக் கோப்பை தொடரில், தமது முதல் போட்டியில் பல்வேறு சவால்களைத் தாண்டி களமிறங்கிய ஈரான் அணி, சோஃபி மைதானத்தில் நியூசிலாந்து உடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இரு அணிகளும் நல்ல வேகத்துடனும் தாக்குதல் உத்திகளுடன் ஆடியதால் ஆட்டமே விறுவிறுப்பாக இருந்தது. ஃபிபா தரவரிசையின்படி நியூஸிலாந்து 84ஆவது இடம், ஈரான் 20ஆவது இடம். இந்த சூழ்நிலையில், ஈரான் தான் வெற்றி வாய்ப்புக்கான சாதகமுள்ள அணி என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருமுறை நியூஸிலாந்து முன்னிலை பெற்றது.

போர் பதற்றத்தில்...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா - இஸ்ரேல் கடந்த பிப்ரவரியில் போர் நடவடிக்கைகளை தொடங்கிய சூழலில், உலக கோப்பையில் பங்கேற்பதே கேள்விக்குறியாக இருந்தது. விசா சிக்கலால், பயிற்சி முகாமை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டிய நிலையும் ஈரானுக்கு ஏற்பட்டது. இந்த அணியுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் அமெரிக்காவுக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்டனர். இந்த சூழலில், ஈரான் அணியின் கால்பந்து ஆட்டம் பேசு பொருளாகி வருகிறது.