news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வெளியானது வெள்ளை அறிக்கை, நிதி சீரமைப்பில் திமுக அரசு தோல்வி
tv

Also Watch

tv

Read this

வெளியானது வெள்ளை அறிக்கை, நிதி சீரமைப்பில் திமுக அரசு தோல்வி

நிதியமைச்சர் மரியவில்சன் பகீர்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 78 ஆயிரத்து 324 கோடி ரூபாயாக அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டிருப்பதாக கூறினார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய நிதி சீரமைப்பில் முந்தைய அரசு தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டியவர், ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் வருவாய் இழப்புகளை சரி செய்யப் போவதாக உறுதி அளித்துள்ளார் நிதியமைச்சர் மரிய வில்சன்.

வெள்ளை அறிக்கை வெளியீடு
தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டு, அதுதொடர்பாக 21 பக்கங்கள் கொண்ட விளக்க படத்தை காட்டி, அதற்கான விளக்கத்தை விவரித்தார். 2021- 2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தை கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஒத்த தொழில்துறை அமைப்பு- பொருளாதார அளவு கொண்ட மாநிலங்களுடன் நியாயமான ஒப்பீடு செய்யும் காலப்பகுதியை எடுத்துக் கொண்டதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்சிக்காலம்

பிற இணை மாநிலங்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்சிக் காலத்தை தங்களின் நிதி நிலையை சீரமைப்பதற்கு பயன்படுத்திக் கொண்ட வேளையில், தமிழ்நாட்டின் நிதிநிலைக் குறியீடுகள், அதற்கு நேர் முரணாகவே உள்ளதாக நிதியமைச்சர் கூறினார். வருவாய் குறைவாக இருப்பதால் தீமை இல்லை என்றும், ஆனால் செலவுகள் அளவுக்கு மீறாமல் இருந்தால் போதும் என்பதை திருக்குறள் மூலம் சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், தமிழ்நாட்டின் வருவாய் 100 ரூபாய் என்றால் செலவு 145 ரூபாயாக உள்ளதாக அறிவித்தார்.

வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக அதிகரிப்பு
2021-2026 வரையிலான காலகட்டத்தில் மாநில சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டிருப்பதாக கூறிய அமைச்சர், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 78 ஆயிரத்து 324 கோடி ரூபாயாக அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை அடைந்திருப்பதாக தெரிவித்தார். 2020- 21ஆம் ஆண்டில் 5.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் கடன் சுமை, கடந்த 5 ஆண்டில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் தனி மனிதக் கடன் அளவு 92 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

தனி நபர் கடன் இரு மடங்காக உயர்வு- நிதியமைச்சர்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கடன் சுமை அதிகமாக உள்ளதாகவும், ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் இரு மடங்காக அதிகரித்து உள்ளதாகவும், அதாவது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவர் மீதும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாய் கடன் உள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் கூறினார். தமிழகத்தின் சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டிக்காக மட்டுமே செலவாகிறது என்றவர், வட்டிச் செலவு மட்டும் 67 ஆயிரத்து 50 கோடியாகவும், மூலதன செலவு மட்டும் 50 ஆயிரத்து 911 கோடி ரூபாயாகவும் உள்ளதாக தெரிவித்தார்.
மொத்த வருவாய் வரவுகளில் வட்டி செலவின விகிதம் மகாராஷ்டிராவில் 10.3%, குஜராத்தில் 12%, கர்நாடகாவில் 16.4% ஆகவும் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 22.8% ஆக உள்ளது என்றார்.

ஒரு ரூபாயில் 22.8 பைசா வட்டிக்கு செலவு
2021- முதல் 2026 வரையிலான காலத்தில் மத்திய அரசின் வரி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த நிதி வளர்ச்சி விகிதம் மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது என்றும், வட்டி, சம்பளம், ஓய்வூதியத்திற்கு மொத்த நிதியில் 64 சதவீதம் செலவினம் ஆவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் நம்பிக்கை

கனிம வளங்கள் இருந்தும் வருவாயில் பெரிதாக மாற்றம் இல்லை என்றும், இணை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் சரக்கு- சேவை வரி வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
வணிக வரி, முத்திரைத் தாள், பத்திரப்பதிவு, ஆயத்தீர்வை மற்றும் கனிம வளத்தில் உள்ள அமைப்பு ரீதியான ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டினால் கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மரிய வில்சன், ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் நிதி வரவை ஏற்படுத்தலாம் என்று கணித்துள்ளதாக கூறினார்.

கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி
பொதுத்துறை நிறுவனங்களின் கடன் 3 லட்சத்து 18 ஆயிரத்து 176 கோடியாகவும், அதில் தமிழ்நாடு மின் வாரியக் குழுமத்திற்கு மட்டும் 2 லட்சத்து 47ஆயிரத்து 130 கோடி ரூபாய் கடன் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், மாநிலத்தின் உண்மையாக கடன் அளவு 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். அரசின் நலத் திட்டங்களால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவினமாகிறது என்றும், அதற்கு இணையாக வருவாய் பெருக்கம் இல்லை என்றவர், 2026 - 2027 இடைக்கால பட்ஜெட்டில் மாநில சொந்த வரி வருவாய் 2 லட்சத்து 29 ஆயிரத்து 579 கோடி ரூபாயாகவும், தற்போதைய சூழலில் அது 2 லட்சத்து 15 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உள்ளதாகவும் கூறினார்.

நேர்மையான, நம்பகமான வரவு செலவு திட்டமிடல்
கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய நிதி சீரமைப்பில் முந்தைய அரசு தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டிய நிதியமைச்சர், ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் வருவாய் இழப்புகளை சரி செய்வது, அரசு கொள்முதலின் செலவை குறைப்பது, பொதுத்துறை நிறுவனம் சீரமைப்பு, தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வருவாயை திரட்டுவது, நேர்மையான- நம்பகமான வரவு- செலவு திட்டமிடல் மூலம் அரசின் நிதிநிலைமை சீரமைக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 42 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau