news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அதிமுகவில் இருந்து விலகல், தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்?
tv

Also Watch

tv

Read this

அதிமுகவில் இருந்து விலகல், தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்?

2 விமர்சன பதிவு, அடுத்து ராஜினாமா

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனக்கு வாக்களித்த மக்களிடம் கருத்து கேட்டுத் தான் தன் முடிவையே அறிவிப்பேன் என திடீர் பாசத்தை பாய்ச்சி, டைலமாவில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு அக்கட்சியில் இருந்தே விலகி உள்ளார். மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி அதிமுகவில் இருந்து விலகுவதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ள நிலையில், அவரது அடுத்த நகர்வு தவெகவில் ஐக்கியம் எனவும் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளன்று அக்கட்சியில் இணைய உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு...
தவெக அரசியலில் என்ட்ரி, அதிமுகவில் PROBLEMS என்ட்ரி. இதுதான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து ரத்தத்தின் ரத்தங்கள் சந்திக்கும் தீரா தலைவலி. வெறும் தோல்வி மட்டுமென்றால் எதிர்க்கட்சி நாற்காலியில் அமர்ந்து ஏட்டிக்கு போட்டியாக கேள்வியாவது கேட்க முடியும். ஆனால், மக்கள் அளித்த தீர்ப்போ அப்படி இல்லாததால் அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதன்பிறகுதான், அதிமுகவில் ஏழரை சனியே எட்டி பார்த்தது. துவள வைக்கும் தொடர் தோல்விக்கு காரணமே இபிஎஸ் தான் எனவும் அவரது தன்னிச்சையான முடிவுகள் தான் ரிசல்ட் ரேட்டிங்கில் கை வைத்துவிட்டதாகவும் ஆலோசனை கூட்டத்தின்போது அதிருப்தியை வெளிப்படுத்திய சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் இபிஎஸ் மட்டும்தான் அதிமுகவா? அவர் எடுப்பதுதான் முடிவா? எனவும் சிடுசிடுவென கடுப்பில் பாய்ந்தனர்.

இபிஎஸ் உடன் வேலுமணி அணி
அதன்பிறகு, தனி அணியாக பிரிந்த சி.வி.சண்முகம் தலைமையிலான அணி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. அந்த ஆதரவால், அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த சி.வி.எஸ். அணிக்கு அப்படி எதுவும் கனியவில்லை. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டது தவறு தானோ? கட்சித்தாவல் நடவடிக்கையால் உள்ள பதவியையும் இழந்து விடுவோமா? என்ற பயம் சிவிஎஸ் அணியில் உள்ள எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு வந்தது. அதனால், ”சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்” என்பதுபோல் வீண் வீராப்பை விட்டுவிட்டு சிவிஎஸ் தரப்பில் இருந்த 21 எம்எல்ஏக்கள் மீண்டும் இபிஎஸ் அணிக்கே வந்து இணைந்து கொண்டனர். இதில் சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தனர்.

எம்எல்ஏக்கள் ராஜினாமா
இதனிடையே, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். அதேபோல், அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் வரிசைகட்டி தவெக பக்கம் தாவி வருகின்றனர். முடிவு சொல்லாமல் நாட்களை இழுத்து கடத்திய விஜயபாஸ்கரும் தவெகவுடன் தான் அரசியல் பார்ட்னர் ஆகப்போகிறார் என பலரும் பேசியபோது, தன்னை நம்பி வாக்களித்த மக்களிடம் கருத்து கேட்காமல் சிறு துரும்பையும் கிள்ளிப் போட மாட்டேன் என அவர் தன் வீட்டிலேயே ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகும்கூட, விஜயபாஸ்கரின் அரசியல் மூவ் சைலண்ட் மோடில்தான் இருந்தது.

சமூக வலை தள பதிவில்...
இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் விஜயபாஸ்கர். அதில், உழைக்கும் உண்மை தொண்டர்களை எதிரிகளாக பார்ப்பதையும் கேள்வி கேட்பதையே குற்றமாக பார்க்கும் தலைமையும் வெற்றிக்கான பாதை அல்ல எனவும் எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனை களத்தை வென்றோம் என்பதை தான் வரலாறு நினைவில் வைத்திருக்குமே தவிர எத்தனை பேரை நீக்கினோம் என்பதை நினைவில் வைத்திருக்காது என குறிப்பிட்டிருந்தார். இபிஎஸ் மீது இருக்கும் அதிருப்தி தான் எக்ஸ் தள பதிவில் வெளிப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

அடுத்த நகர்வு என்ன?
இந்த பதிவை வெளியிட்ட மறுநாளே எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து மற்றொரு பதிவை வெளியிட்டார் விஜயபாஸ்கர். அதில், தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல, அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு என குறிப்பிட்டிருந்த அவர் உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விமர்சன பதிவு சில வரிகள் தான் என்றாலும் அதன் ஆழம் விஜயபாஸ்கரின் அடுத்த நகர்வு என்ன என்பதை உற்றுநோக்க வைத்தது.

விராலிமலை எம்எல்ஏ பதவி ராஜினாமா
அந்த நகர்வு வேறொன்றுமில்லை ராஜினாமா தான். அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்ட விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து, தன் கைப்பட எழுதிய கடிதத்தை கொடுத்து, தனது விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு, அதிமுகவில் இருந்தே விலகி உள்ளார் விஜயபாஸ்கர். மனமெல்லாம் தீராத வேதனையை சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறி உள்ள அவர், கனத்த இதயத்துடனும், கலங்கிய மனதுடனும் அதிமுகவில் இருந்து விலகுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



முதல்வர் பிறந்த நாளன்று...
நான் விலகுவது ஒரு கட்சியில் இருந்து அல்ல, என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தில் இருந்து எனவும் வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை எனவும் தனது அறிக்கையில் கூறி உள்ள விஜயபாஸ்கர் என் மண்ணுக்கான மற்றும் மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு தொடரும் எனவும் கூறி உள்ளார். அந்த அர்ப்பணிப்பு தவெகவில் இருந்துதான் தொடர்கிறது என்பதே அரசியல் வட்டாரத்தின் பேச்சாக உள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளான வரும் 22ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் விஜயபாஸ்கர் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து...
அதிமுகவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருந்த விஜயபாஸ்கர் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளது அதிமுகவிற்கு சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், புதுக்கோட்டையில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ விஜயபாஸ்கர் விலகலை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக பலம் என்ன?
இதனிடையே, விஜயபாஸ்கரோடு சேர்த்து இதுவரை 5 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 42 ஆக சரிந்துள்ளது. அதேபோல், விஜயபாஸ்கர் ராஜினாமாவால் திருச்சி கிழக்கையும் சேர்த்து மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தங்களிடம் இருந்து பறித்த பதவிகளை கொடுக்காமல் இபிஎஸ் கண்கட்டி வித்தை காட்டுவதாக மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வருத்தத்தில் உள்ளனர்.

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை"
தூங்கி எழுந்து, விடிந்து பார்த்தால் எங்கே சில நிர்வாகிகளை காணோம் என தேடும் அளவிற்கு தான் அதிமுகவில் இருந்து கட்சி நிர்வாகிகள் தவெகவிற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படி இரட்டை இலையின் பசுமை கொஞ்சம் கொஞ்சமாக கருக ஆரம்பித்துள்ள நிலையில் இபிஎஸ் இனியும் தாமதிக்காமல் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" மோடுக்கு கொண்டு வந்து மீதம் உள்ளவர்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இரட்டை இலையை பறக்காமல் பாதுகாக்க வேண்டும் எனவும் ரத்தத்தின் ரத்தங்கள் ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Link
இன்றுபோய் நாளை வா, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இபிஎஸ்

இன்றுபோய் நாளை வா, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இபிஎஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவின் எம்எல்ஏக்கள் கொள்முதல் - உதயநிதி ஸ்டாலின் சாடல்

6
37 mins agoshare
தவெகவின் எம்எல்ஏக்கள் கொள்முதல் - உதயநிதி ஸ்டாலின் சாடல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved