Also Watch
Read this
மழை பெய்து வெறித்தாற்போல், பெரும் பிரளயமே நடந்து முடிந்து மீண்டும் அதிமுக ஒரே அணியாக உருமாறி இருக்கும் நிலையில் பறித்த கட்சிப்பதவிகளை மீண்டும் கொடுப்பதற்கு இபிஎஸ் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பதாக கூறி, எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வருத்தத்தில் உள்ளனர். ”இன்றுபோய் நாளை வா” என்பதுபோல் பறித்த பதவிகளை கொடுப்பதற்கு இபிஎஸ் தேதிகளை மாற்றி விளையாடுவதாகவும், அரசியல் களம் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது என்ற நினைப்பா? என வேலுமணி தரப்பு விரக்தியில் உள்ள நிலையில் பவரை குறைத்து பதவிகளை வழங்கும் பணியில் இபிஎஸ் ஈடுபட்டுள்ளதாக அதிமுக அரசியல் வட்டாரம் கூறுகிறது.

தேர்தலுக்கு பிறகு...
எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தாவது உள்ளதே என்ற ஆறுதலில் இருந்த அதிமுக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்த அந்தஸ்தையும் இழந்து கவலை மோடுக்கு சென்றனர். தொடர் தோல்விக்கு காரணமே இபிஎஸ்தான் என முறுக்கிக் கொண்டு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சென்று தவெகவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அதனால், டென்ஷன் ஆன இபிஎஸ் 25 எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளை பறித்து அவர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்ததோடு அந்த பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை உடனே நியமித்து அதிரடி காட்டினார்.

வாக்குறுதி தரப்பட்டது...
ஆனாலும், தவெகவுக்கு கொடுத்த ஆதரவு, அமைச்சரவை நாற்காலியில் ஒரு துண்டை போட்டு வைக்கும் என்ற நம்பிக்கை சி.வி.சண்முகம் தலைமையிலான அணிக்கு இருந்தது. ஆனால், அப்படி எந்த துண்டும் சி.வி.சண்முகம் அணிக்கு போட்டு வைக்கப்படவில்லை. அதன்பிறகு, உள்ள பதவியையாவது கட்சித் தாவல் நடவடிக்கையின் கீழ் பறந்துபோகாமல் பாதுகாப்போம் என சி.வி.சண்முகம் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் மனஸ்தாபங்களை மறந்துவிட்டு மீண்டும் இபிஎஸ் அணிக்கே வந்து ஆஜராகினர். அந்த நேரத்தில், பறிக்கப்பட்ட கட்சிப்பதவிகள் ஒருசில நிபந்தனையுடன் திரும்ப வழங்கப்படும் என எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

வழி மேல் விழி வைத்து...
இதனிடையே, 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். அதேபோல், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் தற்போதுவரை தங்கள் போர்க்கொடியை கீழே இறக்கி வைக்கவில்லை. இதுஒருபுறமிருக்க, அதிமுக என்ற ஆலமரத்தை அசையாமல் பாதுகாப்பது தான் தங்களின் ஒரே நோக்கம், அதிமுக தான் தங்களின் உயிர்மூச்சு என உணர்ச்சிப்பூர்வமாய் பேசி, இபிஎஸ் அணிக்கு சென்ற எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பறிக்கப்பட்ட கட்சிப்பதவிகளுக்காக வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த காத்திருப்பு, காலத்தை கடத்துவதால் வெறுப்பு மோடுக்கு சென்று விட்டார்களாம்.

மீண்டும் மீண்டும் நீக்கம்
ஜூன் 4ஆம் தேதி பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் அது நடக்கவில்லை. அடுத்து, ஜூன் 11 அன்று பதவிகள் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததாம். ஆனால், தேதிதான் பதினொன்றை கடந்ததே தவிர சொன்ன சொல்லை இபிஎஸ் தரப்பு காப்பாற்றுவதுபோல் தெரியவில்லை. மாறாக, எஸ்.பி.வேலுமணி தரப்பில் உள்ள சிலரை நீக்கும் பணிகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிகள் மற்றும் புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தரப்பை சேர்ந்த 3 அதிமுக நிர்வாகிகளை இபிஎஸ் நீக்கி உள்ளார்.

தவிக்க விடுவது ஏன்?
பறித்த பதவிகளை கொடுக்காமல், அடுத்த பதவி நீக்க படலத்தில் அக்கறை காட்டுவது அவ்வளவு அவசியமா? என வருத்தத்தில் உள்ள வேலுமணி தரப்பினர் பறித்த பதவிகளுக்கு பதில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்தான் தற்போதுவரை தொடர்வதாகவும் கவலை அடைந்துள்ளனர். தாய் கழகத்தில் இணைந்தவர்களை இபிஎஸ் தரப்பு தவிக்க விடுவது ஏன்? என விசாரித்தபோது அதிமுக வட்டாரத்தில் இருந்து சில தகவல் கிடைத்துள்ளது. 4, 5, 7 என அதிக தொகுதிகளை தன்வசம் வைத்துள்ள மாவட்ட செயலாளர்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்கி அவர்களின் பவரை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

திமுக VS தவெக
தனி அணி வேண்டாம், ஒற்றுமையுடன் செயல்பட்டு இயக்கத்தை மீட்டுப்போம் என்ற நல்லெண்ணத்தில் வந்தால் நம்மையே கவலையில் ஆழ்த்துவதா? என விரக்தியில் இருக்கும் வேலுமணி தரப்பு அந்த வலி உள்ளுக்குள் இருந்தாலும் உதட்டில் காட்டிக் கொள்ளாமல் பதவிகளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதேநேரம், தற்போது தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் அப்படி ஒன்றும் அதிமுகவிற்கு சாதகமாக இல்லை. திமுக VS தவெக என்றுதான் களமே உள்ளது. இதற்கிடையில் அண்ணாமலையும் ”வி த லீடர்“ என்ற தனி இயக்கத்தை ஆரம்பித்து குறிப்பிட்ட மக்களை தன் கூட்டில் அடைத்து வருகிறார்.

அடுத்து என்ன?
தமிழ்நாட்டை 6 முறை ஆண்ட அதிமுக பிரதான எதிர்க்கட்சியாககூட இல்லாதபோது உள்ளுக்குள் இருக்கும் மனக் கசப்புகளை விரைந்து சரி செய்ய வேண்டாமா? பறித்த பதவிகளை மீண்டும் அவர்களுக்கே கொடுத்து இயக்கத்தை வலிமையாக மாற்ற வேண்டாமா? என வேலுமணி தரப்பு தங்களுக்குள்ளேயே மாறி மாறி முணுமுணுத்துக் கொள்கிறார்களாம்.
அது என்னவோ உண்மைதான், 2026 சட்டமன்ற தேர்தல் அரசியல் களத்தையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளது தான். அதனை உணர்ந்து இபிஎஸ் என்ன செய்யப் போகிறார்? அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved