Also Watch
Read this
By: Manigandan Raja

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ராஜூவ் நகரைச் சேர்ந்த செல்வராஜின் மகள் அனிதா. இவர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசு திட்டங்களை பெற்றுத் தருவதாகவும் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீஸ் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, அனிதா கடந்த 2015–16 ஆம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பதாகவும், தந்தை அருப்புக்கோட்டை ஸ்பின்னிங் மில் உரிமையாளர் என்றும், உயரதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை B4 காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 506(II) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தின் 7வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அனிதா குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், 2016 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்களிடம் அரசு திட்டங்கள் மற்றும் அரசு வேலைகள் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 406, 420, 506(II) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
அதேபோல், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சசிரேகா என்பவர் அளித்த புகாரின் பேரில் 420, 294(b), 506(II) பிரிவுகளின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்குகளில் அனிதாவுக்காக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக பழகி, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்றதாக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் அடிப்படையில், கவிஈஸ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் அனிதா, அவரது கணவர் வீரபெருமாள் மற்றும் தந்தை செல்வராஜ் ஆகியோருக்கு எதிராக 406, 420, 294(b), 506(II) பிரிவுகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, திருச்சுழி அருகே உள்ள செம்பொன் நெறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மனைவி கவிதா (25). பி.ஏ.. பட்டதாரியான இவர் தற்போது மதுரை மாவட்டம் கீரைத்துறையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2023 ம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே ராஜீவ் நகரைச் சேர்ந்த அனிதா, அவரது கணவர் வீரப்பெருமாள் மற்றும் அனிதாவின் தந்தையான தனியார் மில் மேனேஜர்
செல்வராஜ் ஆகியோர் உறவினர் மூலமாக அறிமுகம் ஆகிய நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாகவும், உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இவர்களின் ஆசை வார்த்தைகளை உண்மையென நம்பிய கவிதா அரசு வேலை பெறுவதற்காக அனிதாவிடம் ரூ.7லட்சம் வழங்கியுள்ளார். மேலும் இரண்டு மாதங்களில் பணி நியமன உத்தரவு வாங்கி கொடுப்பதாக அனிதா உறுதியளித்த நிலையில் கவிதாவிற்கு அரசு வேலைக்கான எந்த உத்தரவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கவிதா நேரில் சென்று வேலைக்காக கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது அவர்கள் மூவரும் கவிதாவிற்கு கொலை மிரட்டல்
விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், திருச்சுழி காவல் நிலையத்தில் கவிதா அளித்த புகாரின் பேரில் 406, 420, 506(II) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சுழி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் புகார்களின் அடிப்படையில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று, பின்னர் பணத்தை திரும்பக் கேட்டவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகள் மூலம் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தற்போது அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக அனிதா, வீரபெருமாள் மற்றும் செல்வராஜ் ஆகிய மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved