Also Watch
Read this
நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் வரும் 22 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததை அடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்களுக்கு வினாத்தாளை கடைசி நேரத்தில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, மதுரையிலிருந்து நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி ஒத்திகை நடைபெற்றது.

நீட் மறு தேர்வு அறிவிப்பு
ஆண்டுதோறும் மருத்துவம், பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
தேசிய தேர்வு முகமை வரவேற்பு
இந்த நிலையில், இந்த தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரைத்து உள்ளது. இதன்படி மத்திய அரசு இந்த செயலிக்கு தடை விதித்து உள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
அரசின் இந்த வழிகாட்டுதலை தேசிய தேர்வு முகமை வரவேற்கிறது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000ன் பிரிவு 69ஏ-ன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.

தற்காலிக தடை
இந்தியாவில், ‘டெலிகிராம்’ அக்சஸ், நீட் மறுதேர்வு நடைபெற்று முடியும் வரை தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் ஜூன் 30ஆம் தேதி வரை மெசேஜ் எடிட்டிங் அம்சத்தை தற்காலிமாக தடை செய்யுமாறும் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2 லட்சம் பேர் வரை...
இதில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆக்டிவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 2 லட்சம் பேர் வரை இணைந்து செயல்படும் சூப்பர் குரூப் அம்சம் உள்ளது. இதனால் போலி செய்திகளை பகிர்வது மிக சுலபம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக நீட் மறுதேர்வு முடியும் வரை இந்தியாவில், இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய இணையதளம் அறிமுகம்
ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் யுஜி 2026 தேர்வு தொடர்பாக பரவி வரும் தவறான தகவல், வினாத்தாள் கசிவு குறித்த போலி செய்தி மற்றும் மோசடி நடவடிக்கை குறித்து புகாரளிக்க, தேசிய தேர்வு முகமை புதிய இணைய தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வினாத்தாள் அல்லது விடைக்குறிப்பு முன்கூட்டியே கிடைக்கும் எனக் கூறும் இணையதளங்கள், சமூக ஊடக கணக்குகள், தேர்வில் வெற்றி பெறச் செய்வதாக பணம் கேட்கும் நபர்கள், NTA அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்கள் உள்ளிட்டோர் குறித்து, innovateindia.mygov.in/neet-ug-2026/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved