Also Watch
Read this
தவெகவை முறியடிக்கவும், தங்களை விட்டு விலகிய பாரம்பரிய வாக்கு வங்கியை மீட்டெடுக்கவும் திமுக அதிரடி அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறது. கட்சியின் வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆ.ராசாவை அமர்த்த தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில அளவிலான முக்கியப் பொறுப்புகளிலும் பட்டியல் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு வழக்கத்தை விட அதிக பிரதிநிதித்துவம் வழங்கி, வரவிருக்கும் தேர்தல்களுக்கு கட்சியை பலப்படுத்த அறிவாலயம் அதிரடி திட்டம் தீட்டி வருகிறது.

தமிழக அரசியல் நில நடுக்கம்
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சந்தித்திருக்கிறது.அடிமட்ட தொண்டன் முதல் அறிவாலயத்தின் உச்சி வரை இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரே விவாதம் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிக்கு என்ன ஆனது? என்பதுதான்.

80 சதவீதம் வரை...
பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும் கட்சிகளுக்கு மத்தியில், எப்போதுமே தன் வாக்கு சதவீதத்தை 10 முதல் 15 சதவீதத்தில் இருந்து கம்பீரமாக தொடங்கும் திமுகவுக்கு, இந்த முறை பலத்த அடி விழுந்திருக்கிறது. தேர்தல் கள ஆய்வுகள் காட்டும் அதிர்ச்சி உண்மை என்னவென்றால், காலம் காலமாக திமுகவின் தூண்களாக இருந்த பட்டியல் சமூகம் மற்றும் சிறுபான்மையின மக்கள் தவெகவுக்கு 80 சதவீதம் வரை வாரி இறைத்து வாக்களித்து இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அறிவாலயத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக உடன் கூட்டணியில் இணைந்துள்ளது திமுகவுக்கு பலத்த சரிவை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் நெருக்கடி
இந்த சூழலில், தவெக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்கை அடித்தார் முதலமைச்சர் விஜய். 6 பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மேலூர் விஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு என மொத்தம் 8 பட்டியலின அமைச்சர்களும், தவெக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் திட்டக்குடி கணேசன், கோவி.செழியன் உள்ளிட்ட 4 பட்டியல் சமூக அமைச்சர்கள் மட்டுமே இருந்த நிலையில், தவெகவின் இந்த அதிரடி நடவடிக்கை பட்டியல் சமூக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, திமுகவுக்கு அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

வெறும் 3 நபர்கள் மட்டுமே
மறுபுறம் திமுகவின் அமைப்பு ரீதியான 78 மாவட்டச் செயலாளர்களில், வெறும் 3 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மை தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. தென்காசி கிழக்கு ராஜா, திட்டக்குடி கணேசன், திருவள்ளூர் ரமேஷ் ஆகியோர் மட்டுமே தற்போது மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். மற்ற சமூக மாவட்டச் செயலாளர்களுக்கு 4 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகள் வரை அதிகாரம் இருக்கும் போது, பட்டியல் சமூகத்தை சேர்ந்த இந்த 3 மாவட்டச் செயலாளர்களுக்கும் தலா 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், சிறுபான்மையினரை பொறுத்தவரை நெல்லை மத்திய வகாப், தூத்துக்குடி கீதாஜீவன் உள்ளிட்ட முகங்கள் மட்டுமே மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். இந்த பிரதிநிதித்துவ குறைபாடும் திமுக தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தவெகவை நோக்கி...
இதற்கெல்லாம் பின்னணியில் இருக்கும் மக்கள் கோபத்தை ஆராய்ந்தால், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தென் மாவட்டங்களில் நடந்த சாதியப் படுகொலை, நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் அரசு எடுத்த மெத்தன போக்கு பட்டியல் சமூக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது தெரிய வந்துள்ளது. வாக்கு வங்கிக்காக தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கியது, சாதி ஆவணப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சிறப்பு சட்டம் இயற்றாதது போன்ற காரணங்களே பட்டியல் சமூக மக்கள் திமுகவை உதறிவிட்டு தவெகவை நோக்கி ஓடக் காரணமாய் அமைந்தது என அறிவாலயத்தின் உள்வட்டாரங்கள் குமுறுகின்றன.

திமுக பொதுச்செயலாளராக...
இந்த சரிவை ஈடுசெய்யவும், தவெகவின் வியூகத்தை உடைக்கவும் திமுக அதிரடி மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. திமுகவின் நீண்டகால வரலாற்றில் இதுவரை பட்டியலினத்தைச் சேர்ந்த எவரும் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்ததில்லை. ஆனால், தற்போதைய நெருக்கடியை கையாள, துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ.ராசாவை திமுகவின் பொதுச்செயலாளராக உயர்த்துவது குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து 120 ஆக ஸ்ப்ளிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படும் புதிய மாவட்டச் செயலாளர் பதவிகளில், பெரும்பான்மையான இடங்களை பட்டியலின மற்றும் சிறுபான்மையின சமூகத்தினருக்கு வாரி வழங்க திமுக திட்டமிட்டுள்ளது. அதோடு, தனி தொகுதிகள் தவிர்த்து, பொதுத் தொகுதிகளிலும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நிர்வாகிகளை நிறுத்த தயக்கம் காட்டக் கூடாது என தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.

எம்பி கனிமொழிக்கு...
தேர்தல் தோல்விக்கு பிறகு, எம்.பி.கனிமொழி, செயல்பாடுகள் டெல்லியிலிருந்து அறிவாலயம் நோக்கி முற்றிலும் ரூட் மாறியுள்ளன. தினமும் அறிவாலயம் வந்து தொண்டர்களை சந்திப்பது, மாநில பிரச்சினைகளில் முதல் ஆளாக எதிர்வினை ஆற்றுவது என கனிமொழி 100 சதவீதம் மாநில அரசியலில் தடம் பதிக்க தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஒரே நாளில் தமிழக அரசுக்கு எதிராக 4 காரசாரமான பதிவுகளை பதிவிட்டு, தன் அரசியல் அஜெண்டாவை தெளிவுபடுத்தியுள்ளார் கனிமொழி. தவெகவின் எழுச்சியால் சிதறியுள்ள பெண் வாக்குகளை மீண்டும் திமுக பக்கம் இழுக்க கனிமொழியை மாநில அளவில் முன்னிறுத்தவே இந்த திட்டம் என்கிறார்கள் தலைமை வட்டாரங்கள்.

அடுத்தகட்ட ஆபரேஷன் கை கொடுக்குமா?
தவெக தந்த தேர்தல் அதிர்ச்சியால், தன் பாரம்பரிய வாக்கு வங்கியை தக்க வைக்க திமுக தன் உட்கட்சி அமைப்பையே தலைகீழாக மாற்ற துணிந்து விட்டது. ஆ.ராசாவுக்கு பொதுச்செயலாளர் பதவி, மாவட்டச் செயலாளர்கள் மறுசீரமைப்பு என திமுகவின் இந்த அடுத்தகட்ட ஆபரேஷன் கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved