Also Watch
Read this
By: Manigandan Raja

சூடானில் ட்ரோன் தாக்குதல்களில் 1,000 பேர் உயிரிழப்பு :
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படையான விரைவு படைக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில், கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் நடைபெற்று வருகின்றது. இதில், ட்ரோன் தாக்குதல்கள் மிகவும் தீவிரமானதாக மாறியுள்ளது. இந்த சூழலில், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றிய உயர் ஆணையர் வோல்கர் டர்க், சூடானில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், கொடூரமான மோதல் மற்றும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
"இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வாபஸ் பெறப்படமாட்டாது" :

லெபனான், சிரியா, காஸா ஆகிய பகுதிகளில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் திரும்ப பெறப்பட மாட்டாது என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் இருந்த தங்களது படைகளை அமெரிக்க ராணுவம் திரும்ப பெற்றுள்ளது.
இந்த சூழலில், இஸ்ரேல் கட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனான், சிரியா, காஸா பகுதிகளிலுள்ள பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும், பயங்கரவாதிகளின் அனைத்து கட்டமைப்புகளும் அழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி :
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் தனித்தனியாகத் தொலைபேசியில் உரையாடிய அன்றைய இரவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவியதில் புகழ்பெற்ற மத வழிபாட்டுத் தலம் ஒன்றும் தீக்கிரையானது. இந்த தாக்குதல் போரை தொடருவற்கான நோக்கத்தை உலக நாடுகளுக்கு ரஷ்யா காட்டுவதாக ஜெலன்ஸ்கி தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.