Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் ஆலோசனை :
மத்திய அமைச்சரவை மாற்றப்படலாம் என்கிற தகவல் வெளியாகி வரும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பில் கட்சி அலுவலகத்தை சேர்ந்த மத்திய குழுவை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நிதின் நபின் தலைமையிலான புதிய மத்திய குழு ஜனவரி மாதம் பொறுப்பேற்ற நிலையில், சீனியர் மற்றும் ஜூனியர் நிறைந்த குழு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மத்திய அரசு மீது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாடல் :

பீகாரில் ரயில் பயணத்தின்போது கூட்ட நெரிசலில் மாணவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, அந்த காணொளி தனது உள்ளத்தை உலுக்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் தொழிலதிபர் நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வீணடிப்பதாகவும், சொந்த நாட்டு மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பான பயணத்தை கூட வழங்க முடியவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும், தேர்வு ரத்து மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவை லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை சிதைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் :
சென்னையில் பல அடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திட்ட அனுமதியை எளிமையான முறையில், விரைவாக பெறுவதற்காகவும், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையினால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்ப்பதற்காகவும், குறைந்த நேரத்தில் ஒப்புதல் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டட விதிமுறைகள் மற்றும் கட்டட விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே திட்ட அனுமதியை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.