Also Watch
Read this
இபிஎஸ் உடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, எம்எல்ஏ பதவியை அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். சபாநாயகரை நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அளித்த நிலையில், ராஜினாமா ஏற்கப்பட்டு உள்ளது.

இபிஎஸ் vs சிவிஎஸ்
நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவானது. இபிஎஸ் உடன் எஸ்.பி.வேலுமணி தரப்பு சமாதானமாக சென்றது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, உடனே தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.
விஜயபாஸ்கர் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் விஜயபாஸ்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று ஒரு கருத்தை பதிவிட்டார்.

உண்மையான பயணம் சாத்தியமா?
விஜயபாஸ்கரின் பதிவில் கூறி இருப்பதாவது;
தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல. அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?
இவ்வாறு விஜயபாஸ்கர் பதிவிட்டிருந்தார்.

எம்எல்ஏ பதவி ராஜினாமா
இந்த நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து உள்ளார். அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த விஜயபாஸ்கர் இதுவரை 4 முறை எம்எல்ஏ ஆக இருந்தவர். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததையடுத்து திருச்சி கிழக்கையும் சேர்த்து மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.

கொரோனா காலத்தில்...
கொரோனா பெருந்தொற்று பரவியபோது, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், செய்தியாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலமும், களப்பணிகள் மூலமும் தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டார். மருத்துவராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் அறிமுகம் ஆனவர். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கும் விஜயபாஸ்கர், தவெகவில் இணையவிருப்பதாக தகவல் பரவி உள்ளது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


© Copyright Newstamil 24x7 2026. All rights reserved