Also Watch
Read this
பல கட்ட சோதனைகளைத் தாண்டி 6 மாதங்களுக்கு பிறகு ஒரு வழியாக ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய சென்சார் போர்டு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது.

விஜய் நடித்துள்ள கடைசி படம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. அரசியலுக்கு வருவதால் நடிக்க மாட்டேன் என விஜய் அறிவித்ததால், அவரின் கடைசி படமான ஜனநாயகனின் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோக்களை ரசிகர்கள் வழக்கத்தை விட அதிகமாக கொண்டாடி வந்தனர்.

இதற்கிடையே, ஜனநாயகன் படத்தை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தணிக்கை வாரியத்துக்கு ஜனநாயகன் படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தில் சில வன்முறை மற்றும் சர்ச்சை காட்சிகளை நீக்கும்படி சென்சார் போர்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இணையதளத்தில் லீக்...
படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவும் தயாரான நிலையில், திடீரென ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகார்கள் எழுந்ததாக கூறி சென்சார் சான்று வழங்கப்படாததால், பட ரிலீஸ் தள்ளிப் போனது. படக்குழு நீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் பந்தாடப்பட்ட ஜனநாயகன், தடை மேல் தடைகளை சந்தித்தது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலும் வந்துவிட்டதால் பட தணிக்கை மேலும் சிக்கலுக்குள்ளான நிலையில், தேர்தலுக்கு முன்னதாகவே முழு படமும் இணையதளத்தில் ஏப்ரல் 9ம் தேதி லீக் ஆனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கிடைத்தது சென்சார் சான்று
தேர்தலுக்கு முன்பு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டாலும், சட்டப்பேரவைத் தேர்தலை தனிக் கட்சியாக எதிர்கொண்டு விஜய்யும் முதல்வர் அரியணையில் அமர்ந்துவிட்ட நிலையில், அவர் முதல்வரான 2 மாதங்களுக்குப் பிறகு படத்திற்கு சென்சார் சான்று கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஜனநாயகன் படத்துக்கு A சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை வாரியம்.

குழந்தைகள் பார்க்க முடியாதா?
ஏற்கெனவே சொன்னது போல் படத்தில் இருந்த 13 சர்ச்சை காட்சி நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜனநாயகன் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்களாக உள்ளது. எனினும், A சான்றிதழ் கொடுத்திருப்பதால் குழந்தைகள் தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதை தொடர்ந்து ஜனநாயகன் படத்தை ஜூன் 24ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், பட ரிலீஸுக்கு கிரீன் சிக்னல் கிடைத்திருப்பதும் இணைத்து பேசப்படுகிறது.

தளபதி கச்சேரிக்கு...
படத்தில் ‘தளபதி விஜய்’ என்ற டைடில் கார்டுக்கு பதிலாக ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் கார்டு இடம்பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சென்சார் பிரச்னை நீங்கியதால் வெகு விரைவில் திரைக்கு வருகிறார் ஜனநாயகன்.

அப்புறம் என்ன ‘தளபதி’ கச்சேரிக்கு தயாராகுங்க மக்களே... இருந்தாலும், விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு குழந்தைகளின் பங்களிப்பு முக்கியம் என பேசப்படும் நிலையில், அவரது கடைசி படத்தை குழந்தைகள் தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.