news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மேகதாது விவகாரம், பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
tv

Also Watch

மேகதாது விவகாரம், பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

மத்திய அமைச்சருக்கு கண்டனம்

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டுமென முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார். ’அணை கட்ட பிற மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை,’ என்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூசனின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ஏமாற்றமளிக்கும் பதில்...
இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு கட்டமைப்பை அமைப்பதற்கு முன்னதாக, ஆற்றின் கீழ் மடைப் பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் கட்டாயம் பெற வேண்டும் என்று, 2018 பிப்ரவரி 16ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்கும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்ட விதிகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமலேயே, 'ஜல் சக்தி' துறை இணை அமைச்சரின் ஏமாற்றமளிக்கும் பதில் அளிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில்...
கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றுக்கு இடையிலான அலமட்டி வழக்கின்போது, ​’​ஆற்றின் கீழ்மட்டத்தில் அமைந்துள்ள மாநிலத்தின் (lower riparian state) ஒப்புதல் மிக அவசியமானது,’ என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு அளித்த தீர்ப்பை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த தீர்ப்பில், “ஆற்றைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற அனைத்து மாநிலங்களின் ஒப்புதலும் மத்திய அரசின் அனுமதியும் இன்றி, கர்நாடக மாநிலம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட முடியாது" என கூறப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்தது
காவிரி தீர்ப்பாயமே முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. வெறும் 0.1 டிஎம்சி நுகர்வுப் பயன்பாட்டைக் கொண்ட கேரளாவின் பாம்பார் நீர்மின் திட்ட வழக்கில், ’கீழ்நிலைப் பாசனத்திற்குப் பாதகமாக பாதிப்பு ஏற்படாத வகையில், நீர் திறப்பு அட்டவணையை கேரளாவும் தமிழ்நாடும் கூட்டாக ஒப்புக்கொள்ள வேண்டும்,’ என்று உத்தரவிட்டது. இது, தீர்ப்பாயம் ஆண்டு அளவுகளுக்கு மட்டுமின்றி, கீழ்நிலைப் பாசன நலன்களைப் பாதிக்கும் நீர் திறப்புகளின் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறைக்கும் முதன்மையான முக்கியத்துவம் அளித்தது என்பதை நிரூபிக்கிறது.

கீழ்நிலை மாநிலங்களின் உரிமைகள்
தீர்ப்பின் பதினொன்றாம் பிரிவு, ஒழுங்குமுறை ஆணையத்துடன் பரஸ்பர உடன்பாடு மற்றும் கலந்தாலோசனையின்றி, கீழ்நிலை மாநிலங்களுக்குத் திட்டமிடப்பட்ட விநியோகங்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை எந்தவொரு மேல்நிலை மாநிலமும் எடுப்பதைத் திட்டவட்டமாகத் தடை செய்கிறது. ஆகவே, முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை வெறும் ஒரு பொறியியல் முன்மொழிவாக மட்டும் மதிப்பிட முடியாது. அதன் சட்டப்பூர்வமான ஏற்புத் தன்மையானது காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் 16 பிப்ரவரி 2018 தேதியிட்ட தீர்ப்பு, கீழ்நிலை மாநிலங்களின் உரிமைகள் அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒப்புதல் வழங்க கூடாது...
இந்த நிலையில், கீழ்க்கண்டவற்றை உறுதி செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
* மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரங்களில் நிலைநாட்டப்பட்ட சட்டங்கள் மற்றும் சட்ட கோட்பாடுகளைக் குறிப்பிடாமல், மாநிலங்களவையில் 27 ஜூலை 2026 அன்று 'நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் 876'-க்கு (Unstarred Question No.876) ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் அளித்த பதில் திரும்பப் பெறப்பட வேண்டும்
* காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் CWDT தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றுடன் முழுமையாக இணங்கிச் செல்வது நிரூபிக்கப்பட்டால் ஒழிய, மேகதாது திட்டத்திற்கு எந்தவொரு சட்டரீதியான அல்லது நிர்வாக ரீதியான ஒப்புதலும் வழங்கப்படக்கூடாது

அனைத்து மாநிலங்களையும்...
* நீரோட்டத்தின் அளவு மற்றும் நீர் திறந்துவிடப்படும் முறை ஆகிய இரண்டின் தொடர்பிலும், ஆற்றின் கீழ்மடைப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
* இந்த திட்டம் குறித்த எதிர்கால நடவடிக்கை அனைத்தும், ஆற்றின் கீழ்மடைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களின் கவலைகளையும் கருத்தில் கொண்டு, விரிவான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஆய்வுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரதமர் தலையிட வேண்டும்
காவிரி ஆறு என்பது வெறும் நீராதாரமாக மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நதிகள் தொடர்பான விவகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்பு சார்ந்த நடைமுறைகள் மீதான நம்பிக்கையை தக்க வைக்க, தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் மாண்பைக் காப்பது அவசியம். நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளை உண்மையாக செயல்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தி, இதில் தங்கள் மேலான தலையீட்டை நான் கோருகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் கடிதத்தில் கூறி உள்ளார்.

Related Link
தமிழக உரிமையை மீட்குமா? மேட்டூருக்கு தண்ணீர் வருமா?

தமிழக உரிமையை மீட்குமா? மேட்டூருக்கு தண்ணீர் வருமா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிபர் டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயர் மம்தானி சந்திப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved