Also Watch
Read this
சென்னை தலைமைச்செயலக காவல் நிலைய தலைமைக் காவலர் தனது 2ஆவது மனைவியின் மகளை கடந்த 5 ஆண்டுகள் மிரட்டி மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. இளம்பெண்ணின் வயிற்றில் வளர்ந்த கருவையும் கமுக்கமாக கலைத்ததோடு, அவரது காதலுக்கும் முட்டுக்கட்டை போட்டு, அடித்து சித்ரவதை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் தலைமை காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேட்டாலே அதிர்ச்சி
மகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்ணை மனசாட்சியின்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு மட்டுமின்றி அந்த இளம்பெண் யாரையும் காதலிக்க கூடாது எனவும் தலைமை காவலர் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளது காவல்துறை வட்டாரத்தில் உள்ளவர்களுக்கே பெரும் அதிர்ச்சி தான்.

தலைமைக்காவலர் 2ஆவது திருமணம்
சென்னை தலைமைச்செயலக காவல் நிலையத்தில் 48 வயதான வேல்முருகன் என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2002ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த இவருக்கு ஏற்கெனவே திருமணாகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில் விவாகரத்தான பெண் ஒருவரை கடந்த 2012ஆம் ஆண்டு 2ஆவதாக திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். காவலர் வேல்முருகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் 25 வயதில் ஒரு மகனும், 21 வயதில் மகளும் உள்ளனர்.

மிரட்டி, மிரட்டியே...
இந்நிலையில், 2ஆவது மனைவியின் மகளான 21 வயது இளம்பெண் காவலர் வேல்முருகன் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். தனக்கு 17 வயதாக இருக்கும்போது காவலர் வேல்முருகன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ள அந்த இளம்பெண், தற்போதுவரை மிரட்டி மிரட்டியே அவரது பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

மிரட்டல் விடுத்த காவலர்
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரால் தான் கருவுற்றபோது அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வேல்முருகன் தனக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதுகுறித்து வெளியே சொன்னால் தனது தாய் மற்றும் அண்ணனை கொ* செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தனது புகாரில் இளம்பெண் கூறி உள்ளார்.

காதலிக்க கூடாது என மிரட்டல்
இதனிடைய, Snapchat மூலம் பெங்களூரை சேர்ந்த ஒரு இளைஞரின் அறிமுகம் கிடைத்து நாங்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், அதனையறிந்த வேல்முருகன் தான் யாரையும் காதலிக்கக் கூடாது எனவும் கடைசிவரை அவருடன் தான் இருக்க வேண்டும் என அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறி உள்ளார்.

போக்சோ சட்டத்தில் வழக்கு
அந்த தாக்குதலில் காயமடைந்த இளம்பெண் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, தனது கட்டுப்பாட்டில் வைத்து தினம்தினம் சித்ரவதை செய்யும் காவலர் வேல்முருகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவலர் வேல்முருகனை கைது செய்த பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved