news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கேள்விக்குறியாகும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை
tv

Also Watch

கேள்விக்குறியாகும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை

உச்சநீதிமன்றம் என்ன செய்யப் போகிறது?

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக மத்திய அமைச்சரை நியமித்த 2023ஆம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில்...
இதனிடையே தங்களுக்கு தெரியாமல் அல்லது தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்கள் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ள விவகாரமும் புயலை கிளப்பியுள்ளது. இதனால் இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், அதன் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கை, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறை ஆகியவை மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால், தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான விரிவான நடைமுறையை நாடாளுமன்றம் சட்டமாக்காத நிலையில், 2023 மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு Anoop Baranwal v. Union of India வழக்கில் இடைக்கால ஏற்பாட்டை வகுத்தது. அதன்படி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரச்சினையின் மையம் என்ன?
அதே நேரத்தில், நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை மட்டுமே இந்த நடைமுறை தொடரும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதற்குப் பின்னர் நாடாளுமன்றம் 2023ல் புதிய சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர் இடம் பெறுகின்றனர். முன்னர் உச்சநீதிமன்றம் வகுத்திருந்த நடைமுறையில் மத்திய அமைச்சருக்குப் பதிலாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்தார்.

மாறுபட்ட தீர்ப்பு
புதிய முறை தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் சுயேச்சைத் தன்மையை பாதிக்கும் என்பதுதான் வழக்கு. இதை விசாரித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இந்த வழக்கு முன்பு தீர்க்கப்படாத முக்கியமான அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை எழுப்புவதால், விரிவான அமர்வின் விசாரணை தேவை என்று நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தீர்ப்பளித்துள்ளார். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி திபாங்கர் தத்தா தீர்ப்பளித்தார். இருப்பினும், இந்த விவகாரம் தலைமை நீதிபதியின் முன் வைக்கப்பட்டு, உரிய எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் இரு நீதிபதிகளும் உடன்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு வெறும் அடையாளமா?
தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமல்ல. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒரே தேர்தல் விதிகளுக்குள் போட்டியிடுவதை உறுதி செய்யும் அரசியலமைப்பு சாசன அமைப்பு. எனவே, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதோடு அது சுதந்திரமாகச் செயல்படுகிறது என்பதை பொதுமக்கள் நம்ப வேண்டும். ஒரு அமைப்பு உண்மையில் சுதந்திரமாக இருந்தாலும், அதன் நியமன நடைமுறை வெளிப்படையாகத் தெரியவில்லை என்றால், அதன் முடிவுகள் மீது சந்தேகம் உருவாகலாம் என்று நீதிபதி திபாங்கர் தத்தா கூறியுள்ளார்.
மூன்று பேர் கொண்ட குழுவில் பிரதமரும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் அமைச்சரும் இடம்பெறுவதால் ஆளும் தரப்புக்கு மெஜாரிட்டி கிடைத்து விடுகிறது. எனவே மூன்றாவது உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் என்பது வெறும் அலங்காரமாக மட்டுமே இருக்கும் என்பதையும் நீதிபதி தத்தா சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏன் இந்த வழக்கு இப்போது முக்கியம்?
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து வெளியில் இருந்து ஏற்கெனவே பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் இருவரே, தங்களுக்குத் தெரியாமல் அல்லது தங்களது ஒப்புதல் இல்லாமல் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை பதிவு செய்துள்ளனர். அதிலும் ஒரே நாளில் நான்கு ஆட்சேபனைகள் பதிவு செய்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் இப்போது என்ன செய்யப் போகிறது?
இந்த ஆட்சேபனைகள் சாதாரண நிர்வாக விவகாரங்களைப் பற்றியவை அல்ல. புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்காளர் பெயர்களை நீக்குவது, வாக்காளர் தரவுத்தளத்தின் கட்டுப்பாடு, தேர்தல் பட்டியல் தொடர்பான மேல்முறையீடுகள், மென்பொருள் கட்டுப்பாடு உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணிகளையே அவை தொட்டுள்ளன. இதனால்தான் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

கவனம் பெறும் கேள்வி
ஜனநாயகத்திற்கு உயிர்போன்ற தேர்தலை நடத்தும் நிறுவனம் சுதந்திரமானதா? அதன் சுயேச்சைத் தன்மை உறுதி செய்யப்படுமா? என்ற கேள்விகள் இப்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளன.

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை பறிபோனால் ஜனநாயகம் கேலிக் கூத்தாகி விடும். எனவே, இந்த நம்பிக்கையை உறுதி செய்வதற்கான அரசியலமைப்புச் சட்டத் தரத்தை உச்சநீதிமன்றம் எவ்வாறு வரையறுக்கப் போகிறது என்பதுதான் இப்போது நாட்டின் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான கேள்வி.

Related Link
மருந்துகளின் விலை, பகல் கொள்ளையை தடுக்குமா மத்திய அரசு?

மருந்துகளின் விலை, பகல் கொள்ளையை தடுக்குமா மத்திய அரசு?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

“சிக்மா” 4-வது பாடல் வெளியீடு & விஜய் சேதுபதியின் “பத்தா”

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved