Also Watch
Read this
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக, யாரும் அச்சப்பட வேண்டாம் என, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

அசாதாரண சூழல்
இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:
சிலிண்டரை பொறுத்தவரை நமக்கு வரும் எல்பிஜி, பெரும்பாலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. போர் ஆரம்பித்த பிறகு, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்துள்ளதால், எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எந்த கப்பலும் வெளியே வர முடியாத அசாதாரண சூழ்நிலை இருக்கிறது. பல இடங்களில் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை மத்திய அரசு வாங்கினாலும் கூட, எல்பிஜி காஸ், சவுதியில் இருந்து அதிகமாக வருகிறது.

இயல்பு நிலை திரும்பும்
மிக விரைவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி இயல்பு நிலைக்கு வந்த பிறகு, கப்பல்கள் வர ஆரம்பிக்கும். வணிக சிலிண்டர் புக் செய்ய வேண்டும் என்றால் 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். போருக்கு பிறகு, இதனை மத்திய அரசு 25 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. வீட்டிற்கு தேவையான காஸ் சிலிண்டர் தடையில்லாமல் வர வேண்டும். அதேபோல் நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் இடைஞ்சல் இல்லாமல் வர வேண்டும். நிச்சயமாக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். தற்போது காஸ் பயன்பாடு பல மடங்கு உயர்ந்து உள்ளது. 60 சதவீதம் நாம் இறக்குமதி செய்து தான் மக்களுக்கு பெட்ரோலிய பொருட்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, விரைவில் இயல்பு நிலைக்கு வரும்.

அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்
எல்லா பிரச்னைக்கும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பொதுவெளியில் தேவையில்லாத அச்சத்தை, பயத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved