Also Watch
Read this

தமிழகத்திற்கு, உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை மாநில அரசு செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு
இதுதொடர்பாக, இபிஎஸ் வெளியிட்ட பதிவு;
ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்து உள்ளது. LPGக்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

உணவகங்களுக்கு பாதிப்பு
தமிழகத்தில் ஏற்கனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று, மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும்.

அம்மா உணவகங்களை...
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழு வீச்சில் இயங்க வைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.