Also Watch
Read this
By: Manigandan Raja

சிறப்பு பூட்ஸை அறிமுகப்படுத்தியுள்ள "நைக்" நிறுவனம் :
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 20 ஆண்டுகால கால்பந்து சாதனையை கௌரவிக்கும் விதமாக "நைக்" நிறுவனம் "மெர்குரியல் சூப்பர்ஃபிளை ஆர்ஜிஎன்" என்கிற தங்க நிற சிறப்பு பூட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
6 வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற அவரது உலக சாதனையை இந்த பூட்ஸ் கொண்டாடுகிறது. பூட்ஸ் முழுவதும் மெட்டாலிக் தங்க நிறத்தில் பிரகாசிக்கிறது. இதன் சோல்பேட் குரோம் பினிஷிங்குடன் கூடிய தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பதிப்பு பூட்ஸின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக 28 ஆயிரத்து 300 ரூபாயாகும்.
ஜப்பானின் நவோமி ஒசாகா அசத்தல்:

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்று வரும் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும், ரஷ்யாவின் எகர்டினா அலெக்சாண்ட்ரோவாவும் மோதினர்.
இதில் சிறப்பாக விளையாடிய நவோமி ஒசாகா 6-க்கு 3, 6-க்கு 3 என்கிற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் நவோமி ஒசாகா, சீனாவின் வாங் ஜின் யுவை சந்திக்கிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அபாரம் :

யு.எஸ். ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் ராவத் - மனீஷா ஜோடி, இந்தோனேசியாவின் விராவன் இஷான் ஆதம் - செரினா கனி ஜோடி உடன் மோதியது.
இதில், சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி 21-க்கு 15, 21-க்கு 16 என்கிற நேர்செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved