Also Watch
Read this
எரிவாயு தட்டுப்பாட்டால், பொது மக்களும், வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்படாமல் இருக்க, மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் அவசர ஆலோசனை
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு, வணிக சிலிண்டர் விவரம் கேட்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ள நிலையில், 3 வாரங்களுக்கு தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழர்கள் பாதுகாப்பு
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு;
அமெரிக்கா - ஈரான் போரினால், தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இன்று (மார்ச் 10ஆம் தேதி) விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும், அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

மாற்று ஏற்பாடுகள்
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொது மக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு உள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved