Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீரென வந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அங்கு பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்களிடம் சேவைகள் குறித்தும், பதிவுப் பணிகள் தாமதமின்றி நடைபெறுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பெறப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை, நிறைவு செய்யப்பட்ட பதிவுகள், நிலுவையில்
உள்ள கோப்புகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தார். மேலும், கடந்தகால பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா, அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்,
தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதுடன், பணப்பறிப்பு குறித்த புகார்களும் வந்ததாகக் கூறிய அவர், துறையை ஒழுங்குபடுத்துமாறு முதலமைச்சர் நேரடியாக அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், தற்போது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் அலுவலகங்களில் ஆய்வு செய்தபோது ஏராளமான கோப்புகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், முன்னர் பதிவான கோப்புகளில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது தவறுகள் நடந்துள்ளனவா என்பதை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.