Also Watch
Read this
அதிமுகவிலிருந்து விலகி தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே 3 ரவுண்டு விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், 4ஆவதாக எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே நேருக்கு நேர் விசாரணை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4ஆவது கட்ட விசாரணைக்கு பின்னணியில் உள்ள ரகசிய வியூகம் என்ன? இந்த விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு முரண்டு பிடிப்பது ஏன்?

எம்எல்ஏக்கள் ராஜினாமா
அதிமுகவிலிருந்து விலகி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்துவிட்டு வெளியேறிய எம்.எல்.ஏ.க்களின் விவகாரம் தற்போது க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியிருக்கிறது.
தமிழக அரசியலில், அதிமுகவின் உட்கட்சி மோதல் முடியாத பஞ்சாயத்தாக நீடித்து வருகிறது. கட்சி தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக விலகி, நாங்கள் எம்.எல்.ஏ. பதவியையும் துறக்கிறோம் என ராஜினாமா கடிதம் அளித்த சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோரின் விவகாரம் அடுத்தகட்ட பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

மீண்டும் அழைப்பு
ஏற்கெனவே, 2 முறை நேரில் விசாரணை, ஒரு முறை கடிதம் மூலம் விசாரணை நடந்து முடிந்த நிலையில், தற்போது 4ஆவது முறையாக மீண்டும் அழைப்பு பாய்ந்திருக்கிறது. சபாநாயகர் தரப்பிலிருந்து இந்த அதிரடி காய் நகர்த்தல் பின்னணியில் பெரிய அரசியல் தந்திரமே மறைந்திருக்கிறதாம்.

இபிஎஸ் முன்னிலையில்...
வரும் 30ஆம் தேதி, தலைமைச்செயலகத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுவும் சாதாரண விசாரணையாக இல்லாமல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது தான் பெரும் அலைகளை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே 3 முறை நேரில் அழைத்து பேசி முடித்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு நான்காம் கட்ட விசாரணை எதற்கு? என்ற முணுமுணுப்பு ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.

இறுதி ஆட்டமாக...
ஆனால், சட்டமன்ற விதிமுறைகளின்படி, ஒரு உறுப்பினர் அளிக்கும் ராஜினாமா கடிதம் சுய விருப்பத்தின் பேரில் அளிக்கப்பட்டதா? அல்லது யாரேனும் பின்னணியில் இருந்து இயக்கும் மறைமுக அழுத்தமா? என்பதை தீர விசாரித்து உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. முந்தைய 3 கட்ட விசாரணைகளிலும் தெளிவான முடிவை எட்ட முடியாத சூழலில், இந்த 4ஆம் கட்ட விசாரணையே இறுதி முடிவை தீர்மானிக்கும் இறுதி ஆட்டமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கட்சி தாவல் தடை சட்டத்தில்...
இதனிடையே, இந்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவர்களாக விரும்பி ராஜினாமா செய்ததாக ஏற்றுக்கொள்ள கூடாது. கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் இபிஎஸ்ஸின் பிடிவாதம்.

ராஜினாமாவை சபாநாயகர் அங்கீகரித்தால், அந்த தொகுதிகள் காலியான அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் களம் சூடாகும். அது தற்போதைய சூழலில் அதிமுகவுக்கு தேவையில்லாத தலைவலி. அதனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே கட்சி மாறிய துரோகிகள் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்க முடியும்.

இபிஎஸ் வருவாரா?
ஆனால், ராஜினாமாவாக மாறினால், அது அதிமுக தலைமையில் மீதுள்ள அதிருப்தியாக உருவெடுக்கும். இதையெல்லாம் கணித்து தான், ’உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் உங்கள் முகத்திற்கு முன்னாலேயே உண்மையை சொல்லட்டும், அதற்கு பிறகு முடிவெடுக்கலாம்’ என சபாநாயகர் ஸ்கெட்ச் போட்டிருக்கிறாராம். இந்த விசாரணையில் இபிஎஸ் நேரடியாக பங்கேற்பாரா? அல்லது வழக்கறிஞர்களை அனுப்பி சட்டரீதியான முட்டுக்கட்டை போடுவாரா?என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வி.

அரசியல் பின்னடைவு
சபாநாயகரை பொறுத்தவரை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள், ’நாங்கள் சொந்த விருப்பத்தில்தான் முடிவெடுத்தோம்’ என இபிஎஸ் முன்னிலையிலேயே வாக்குமூலம் கொடுத்துவிட்டால், அடுத்த கணமே ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும். இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை தரும் என்பதால், அதிமுக சட்டப் பிரிவு வழக்கறிஞர்கள் போர்க்கால அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறார்களாம். மூன்று ரவுண்டுகள் கடந்தும் முடியாத இந்த சஸ்பென்ஸ், 4ஆவது ரவுண்டில் சுபமுஹூர்த்தம் காணுமா அல்லது மீண்டும் நீதிமன்ற படிகளை ஏறுமா? என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.