Also Watch
Read this
திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான மூன்றாவது கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் இழுபறி ஏற்பட்டு உள்ளது. கூடுதல் தொகுதிகள் கேட்டும் கிடைக்காத நிலையில், மீண்டும் பேசி விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று, சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

தொகுதி பங்கீட்டு பேச்சு
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:
தமிழகத்தில், தேர்தல் நடைபெறுவதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. அடுத்து ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு தொடர்பாக அனைத்தும் நிறைவு பெறும் என்று கருதுகிறோம். கடந்த முறையை விட குறைவான தொகுதியை பெற்றுக் கொள்ளுமாறு திமுக குழுவினர் கேட்டு கொண்டனர்.

கூடுதல் தொகுதிகள் வேண்டும்
கடந்த காலத்தில் போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும், அதற்கு தகுந்தபடி அதிக தொகுதிகளை தர வேண்டும் என்று நாங்கள் கூறி உள்ளோம். கட்சி தலைவரிடம் பேசிவிட்டு, பிறகு கூறுவதாக கூறி உள்ளனர்.

தொடர்ந்து முயற்சிப்போம்
நிறைய கட்சிகள் இருக்கும் போது இந்த மாதிரியான நிலை தவிர்க்க முடியாது, அதனை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். மார்க்சிஸ்ட் கட்சிக்கான கூடுதல் தொகுதியை பெறுவதில் நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி வழங்கியதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.
இவ்வாறு சண்முகம் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved