Also Watch
Read this
சென்னையில், "போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு" விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்புக்கான உறுதிமொழியை ஏற்கவைத்தார்.

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம், 6 சிறந்த தன்னார்வலர் குழுக்கள், மாணவர்களுக்கும் விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்.

பதக்கம் பெற்ற ராமநாதபுரம் எஸ்.பி.யின் மகனை தூக்கிக் கொஞ்சிய முதலமைச்சர் விஜய், தந்தையைப் போலவே காவல் சீருடை அணிந்து வந்து அசத்திய சிறுவனுக்கு சல்யூட் வைத்தார்.

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு
சென்னை மாநில கல்லூரியில், இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி, ’போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில், 2,000 மாணவர்கள் நேரிலும், 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து சுமார் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொலி வாயிலாகவும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

காவலர்களுக்கு பதக்கம்
தமிழகத்தில், 'போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்' 2023ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இதன்படி, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

பரிசு, பாராட்டுச் சான்றிதழ்
போதைப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் தலா 3 சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தலா 3 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்குப் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்,

இரண்டாம் பரிசாக 75,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 50,000 ரூபாய் பரிசுத்தொகைக்கான வங்கி வரைவோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பைகளையும் முதலமைச்சர் விஜய் வழங்கிச் சிறப்பித்தார்.

போதைப்பொருட்கள் அழிப்பு
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல்துறை பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதலமைச்சர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்வையிட்டார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved