Also Watch
Read this

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முதல் அரையிறுதி போட்டியில் சமபலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? இரு அணிகளின் பலம், பலவீனங்கள், என்னென்ன? வரலாற்று சாதனைகள் என்னென்ன?

இறுதிக்கட்டத்தில்...
பரபரப்பாக நடைபெற்று வரும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முனேறியுள்ளன.

பிரான்ஸ் vs ஸ்பெயின்
முதல் அரையிறுதி போட்டியில், பிரான்ஸ் அணியும், ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கிலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்ல துடித்து வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட 18 வயது இளம் புயல் லமினே யமால் அடங்கிய ஸ்பெயின் அணி முனைப்பு காட்டி வருகிறது.

ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த கிலியன் எம்பாப்பேவும், பார்சிலோனா அணியின் லமினே யமாலும், லா லிகா 'எல் கிளாசிகோ' (El Clasico) தொடரில் பலமுறை நேரடியாக மோதி உள்ளனர். அந்த தொடரில் எம்பாப்பேவுக்கு எதிரான நாக்-அவுட் போட்டிகளில் யமாலின் அணி தோற்றதே இல்லை.

2006ல் பிரான்ஸ் அணி வெற்றி
ஆனால், உலகக் கோப்பை அரங்கில், இருவரும் தற்போது தான் முதல்முறையாக நேருக்கு நேர் மோத இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. எம்பாப்பேவும், யமாலும் தான் நேருக்கு நேர் களம் கண்டதில்லையே தவிர, பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் இதற்கு முன்பு 2006 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதியுள்ளன. அந்த போட்டியில் 3 -1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி பிரான்ஸ் அணி தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் எப்படி?
இரு அணிகளும் இதற்கு முன்பு 38 போட்டிகளில் நேரடியாக மோதிக் கொண்டுள்ள நிலையில், அவற்றில் ஸ்பெயின் அணி 18 முறையும், பிரான்ஸ் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 7 போட்டிகள் இரு அணிகளும் சம பலத்தை நிரூபித்ததால் டிராவில் முடிந்தன. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி 5 போட்டிகளில் ஸ்பெயின் 3 முறையும், பிரான்ஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

பிரான்ஸ் அணியின்...
வரலாற்று சாதனைகளிலும் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. 1998 மற்றும் 2018 என இரண்டு முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள பிரான்ஸ் அணி, யூரோ கோப்பையையும் 1984 மற்றும் 2000 என இரண்டு முறை வென்றுள்ளது. 1984ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

ஸ்பெயின் அணியின்...
அதே போல், ஸ்பெயின் அணி 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும், 1964, 2008, 2012, 2024ஆம் ஆண்டுகளில் 4 முறை யூரோ கோப்பையையும் வென்றுள்ளது. 1992, 2024ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியிலும் 2 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

பலமும் பலவீனமும்
பிரான்ஸ் அணியில் எம்பாப்பே, உஸ்மான் டெம்பேலே, மைக்கெல் ஒலிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும், பிராட்லி பார்கோலா, டெம்பேலே, ஒலிஸ் மற்றும் எம்பாப்பே அடங்கிய அட்டாக்கிங் கூட்டணி பிரான்ஸ் அணியின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

நடப்பு தொடரில் குரூப் சுற்றில் செனகல் மற்றும் நார்வேக்கு எதிராக கோல்களை விட்டுக்கொடுத்து தடுமாறியது பலவீனமாக பார்க்கப்படுகிறது.

ஆறு போட்டிகளில்...
அதே போல், ஸ்பெயின் அணியில் மிக்கேல் ஓயர்சபல், மிக்கேல் மொரேனோ, மார்க் குகுரெல்லா, லமினே யமால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்பெயினின் மிகப்பெரிய பலமே அசைக்க முடியாத தடுப்பாட்டம் தான். நடப்பு தொடரில் ஸ்பெயின் அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் ஒரு கோல் கூட வாங்கவில்லை. காலிறுதியில் பெல்ஜியத்திற்கு எதிராக மட்டுமே 1 கோல் வாங்கினர்.

இளம் வீரர் யமால் துடிப்புடன் விளையாடினால்...
அதேசமயம் ஃபார்வர்ட் அட்டாக் சற்று மந்தமாக இருப்பது ஸ்பெயினின் பலவீனமாக கருதப்படுகிறது. மற்ற பலவீனங்கள் என்று பார்த்தால் கடைசி இரண்டு போட்டிகளிலும் மெரினோவின் கடைசி நிமிட கோல்களால் மட்டுமே ஸ்பெயின் அணி தப்பியது. இளம் வீரர் யமால் துடிப்புடன் விளையாடினால் மட்டுமே பிரான்ஸின் பலத்த அரணை உடைக்க முடியும் என்ற சூழல் உள்ளது.