Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் காசாவுக்கான அமைதி திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது, பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பு.
பணயக்கைதிகள் விடுதலை மற்றும் மேம்படுத்தப்பட்ட மனிதாபிமான உதவி, காசா மக்களுக்கு நிம்மதியை அளித்து, நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தால் முன் வைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, காசாவில் சண்டையை நிறுத்தி, பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை காசாவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கானோர் காசாவை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துள்ளது.
இந்நிலையில், இது ஒரு சிறந்த நாள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:
இஸ்ரேஸ் - ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின்படி, பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும்.
அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்.அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இது ஒரு சிறந்த நாள்.
இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved