Also Watch
Read this
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர், முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அறிவு, அமைதி, நல்ல ஆரோக்கியம், வெற்றி
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறி இருப்பதாவது;
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தடைகளை நீக்கி, ஞானம் மற்றும் வளத்தின் திருவுருவமாக விளங்கும் விநாயகப் பெருமான், நம் அனைவருக்கும் அறிவு, அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை அருள்வாராக.
இந்த திருநாள் நமது ஒற்றுமை, நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தி, வளமான மற்றும் முன்னேறிய தமிழ்நாட்டையும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஊக்கத்தை அளிக்கட்டும்.
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து பதிவில் கூறி இருப்பதாவது;

விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கை மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்.

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

வளமும், நலமும், மகிழ்ச்சியும்
'We The Leaders' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறி இருப்பதாவது;
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறட்டும். வாழ்வில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, குடும்பத்தில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved