Also Watch
Read this
தேர்தல் வழக்கில், முதலமைச்சர் விஜய் தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இரு நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறி உள்ளது.

பெரம்பூர் தொகுதியில்...
தமிழக முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித் தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர். இதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அவகாசம் கோரிய விஜய் தரப்பு
இந்த தேர்தல் வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி, விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி, மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தேர்தல் வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டியுள்ளது. கடந்த முறையே வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று கூறியதை நினைவூட்டினார். இதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

வரும் 27ஆம் தேதி...
இந்நிலையில், இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளார். வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று, முதல்வர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved