Also Watch
Read this
விருதுநகர் அருகே மூடிக்கிடக்கும் பட்டாசு ஆலைகளால் அங்கு பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பசியும் பட்டினியுமாக கிடப்பதாக புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வாழையடி வாழையாக பட்டாசு தொழிலையே நம்பி உள்ள தங்களுக்கு மாற்றுத் தொழிலையாவது ஏற்பாடு செய்து கொடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் சிலநேரங்களில் ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிடுவதாக மனம் நொந்து பேசி உள்ளனர்.

எட்டு லட்சம் தொழிலாளர்கள்
தங்கள் சொற்ப வருமானத்திற்கும் வேட்டு வைத்ததால் வேட்டு தொழிலையே நம்பி வாழும் நாங்கள் வயிற்றுப்பசியோடு மரத்துக்கு மரம் அமர்ந்து நிழல் னே வாங்கி கொண்டிருக்க முடியும் என்பதுதான் கந்தகபூமியில் வாழும் மக்களின் குரல்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்களுக்கு பட்டாசு தொழில்தான் வாழ்வாதாரமே. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையே இங்கு தயார் செய்யப்படும் பட்டாசு உற்பத்தி மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தொடர் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால் தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக சிறப்பு தனிப்படை அமைத்து அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பட்டாசு தொழிலாளர்கள்...
இதன் விளைவாக, 50க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் விதிமீறல்களில் ஈடுபட்டது தெரிய வந்ததால் அவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதோடு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

அந்த ஆலைகளை முறைபடுத்தி மீண்டும் உற்பத்தியை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி ஆய்வே மேற்கொள்ளப்படாத ஆலை தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு பணிபுரிந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ரேஷன் அரிசி வாங்கினாலும்...
இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், ’வேலைக்கு சென்றால்தான் வயிற்றையே கழுவ முடியும் என்ற நிலையில், பச்சமண்ணுக்கு பால்கூட வாங்க முடியவில்லை,’ எனவும் வருத்தம் தெரிவித்தனர். ரேஷன் அரிசியில் சோற்றை வடித்தாலும் அதற்கு குழம்பு வைக்க காய்கறி கடையில் காசு கொடுத்துதானே வாங்க வேண்டும்? அதற்கு வழியில்லையே? என புலம்பிய அவர்கள் தங்களுக்கு வேறு வேலையும் தெரியாது, தங்கள் பகுதியில் பிழைப்புக்கு வேறு வழியும் இல்லை என வேதனைப்பட்டனர்.

ஒருவேளை உணவு மட்டுமே...
வாரத்திற்கே 300 - 350 ரூபாய் மட்டுமே உழைக்கும் தங்களுக்கு வேலையே இல்லை என்றால் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது? அவர்களின் படிப்பு செலவுகளை எப்படி சமாளிப்பது? என கேள்வி எழுப்பிய பட்டாசு தொழிலாளர்கள் தங்களுக்கு மாற்றுத்தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வேலை இல்லாததால் சிலநேரங்களில் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு தூங்குவதாக மனம் நொந்த ஒரு தொழிலாளி, அரசுதான் தங்களுக்கு நிம்மதியை கொடுக்க வேண்டும் எனக்கூறினார்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக விருதுநகர் மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved