Also Watch
Read this
அமைக்கப்படாத சாலைக்கு கோடிகளை செலவழித்ததாக கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரால் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் லஞ்சஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் இறங்கி ஆட்டம் காண வைத்தது. தற்போது, கண்ணுக்கு தெரிந்தே எ.வ.வேலு 8 கோடி ரூபாயை ஏப்பம் விட்டுள்ளதாக மீண்டும் அதே அறப்போர் இயக்கமே தகுந்த ஆதாரங்களுடன் புகாரளித்துள்ள நிலையில், நிலைமையை எப்படி சமாளிப்பது? என திமுக தலைமை முழித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சரான எ.வ.வேலு
திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த எ.வ.வேலு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் பஞ்சமின்றி படையெடுத்தன. அதில் ஒன்றுதான், அறப்போர் இயக்கம் கொடுத்த புகார். நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமலேயே 3 கோடியே 23 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, எ.வ.வேலுவை எப்ஐஆரில் ஏ-ஒன் ஆக சேர்த்ததோடு அவரது வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது. இதில், பல ஒப்பந்த கோப்புகள், நிதி பரிவர்த்தனைகள், கணினி தரவுகள், வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

அடுத்த புகார்...
’மிசாவையே பார்த்த நாங்கள் இந்த சோதனை பூச்சாண்டிக்கெல்லாம் துளியும் அஞ்சமாட்டோம், மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை, நான் பரிசுத்தமானவன்,’ என எ.வ.வேலு விளக்கம் கொடுத்து ஒன்றரை மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த புகார், லஞ்சஒழிப்புத்துறை டேபிளுக்கு ஆதாரத்துடன் சென்றுள்ளது. இதுவும், அதே அறப்போர் இயக்கமே கொடுத்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள "கலைஞர் திடல்" நிலத்தில் திமுக வடக்கு மண்டல இளைஞர்அணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தது திமுக வடக்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தான்.

சட்டவிரோதமாக மண்...
மாநாடு நடந்த 124 ஏக்கர் பரப்பளவு உள்ள கலைஞர் திடல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. மாநாட்டிற்கான நிலத்தை சமன்படுத்துவதற்காக அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி ஆழத்திற்கு சட்டவிரோதமாக மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக, அறப்போர் இயக்கத்தின் நிறுவனர் ஜெயராம் வெங்கடேசன் புகார் கூறியுள்ளார்.

ஒரே கல்லில் 2 மாங்காய்
அதேபோல், ’மாநாடு நடத்துகிறேன் என்ற பெயரில் கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி அளவுக்கு மகனுக்காக மண்ணை வாரிய எ.வ.வேலுவால் அரசுக்குதான் 8 கோடி ரூபாய் இழப்பு,’ எனக்கூறிய ஜெயராம் வெங்கடேசன், இயற்கை வளங்கள் சூறையாடுவதை கண்டு கொந்தளித்த உழவர் உரிமை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு ஒருவாரம் சிறையில் அடைக்கப்பட்டதெல்லாம் அதிர்ச்சியின் உச்சம் என கூறினார்.

ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல ஒரு ரூபாய் செலவு இல்லாமல் தனது மகன் நிலத்தை சமன்படுத்தியதோடு மாநாட்டையும் நடத்தி முடித்துவிட்டார் எ.வ.வேலு. ஆக, கண்ணுக்கு தெரிந்தே நேரடி ஊழல் செய்துள்ள எ.வ.வேலு மீது லஞ்சஒழிப்புத்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் ஜெயராம் வெங்கடேசன்.

எப்படி சமாளிப்பது?
அதேபோல், ”கலைஞர் திடல்" நிலத்தை குமரனுக்கு விற்பனை செய்த ரிஷி என்டர்பிரைசஸ் நிறுவனம், நெடுஞ்சாலைத்துறையில் பல நூறு கோடி ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனம் எனக்கூறிய அவர், பாண்டித்துரையின் நிறுவனத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணத்தை வருமானவரித்துறை பறிமுதல் செய்ததாக கூறினார்.

மேலும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான 124 ஏக்கர் நிலத்தை வெறும் 46 கோடிக்கு வாங்கியது குறித்தும் விசாரணையை முடுக்கிவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். கடந்த ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர்கள் செய்த தில்லுமுல்லு வேலைகள் அனைத்தும் தவெக ஆட்சியில் வரிசைகட்டி வெளியில் வருவதால், அதனை எப்படி சமாளிப்பது? என்பது தெரியாமல் திமுக தலைமையும் விழிபிதுங்கி இருக்கிறார்களாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved